ஓட்டுப்போட்ட மையுடன் ஓட்டு இல்லை என்று கூறி போராட்டம் நடத்திய பாஜகவினர்!!
தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி முதல் கட்ட மக்களவை தேர்தல் நடந்து முடிந்தது. இதில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்தன. குறிப்பாக கோவை தொகுதியில் நிறைய வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இல்லாமல் விடுபட்டு இருந்தது. அதிலும் கிட்டத்தட்ட 1 லட்சம் வாக்காளர்கள் பெயர் விடுபட்டு விட்டதாக கோவை தொகுதி வேட்பாளரும், பாஜக மாநில தலைவருமான அண்ணாமலை குற்றம் சாட்டி இருந்தார்.
அதிலும் குறிப்பிட்டு பாஜக ஆதரவாளர்கள் பெயரை மட்டும் தான் நீக்கி விட்டார்கள் என அண்ணாமலை பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில், இன்று கோவையில் பாஜகவினர் மற்றும் பீப்பிள் ஆஃப் அண்ணாமலை என்ற இயக்கத்தை சேர்ந்த பலர் வாக்காளர் பட்டியலில் எங்கள் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியவில்லை என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக நீதி நியாயம் கேட்டு அண்ணாமலைக்கு ஆதரவாக குரல் எழுப்பி பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அவர்கள் நான் உயிருடன் இருக்கிறேன். ஆனால் எனக்கு ஏன் வாக்கு இல்லை என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் போராட்டத்தில் ஈடுபட்ட அத்தனை பேரும் வாக்களித்தவர்கள்.
அவர்கள் அனைவரின் கைகளிலும் வாக்கு செலுத்தியதற்கான அடையாளமாக மை இடப்பட்டிருந்தது. தேர்தலில் வாக்கு செலுத்திவிட்டு எங்களுக்கு வாக்கு இல்லை என கூறி பாஜக ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர் பாஜகவை டிரோல் செய்தும் வருகிறார்கள். அதுமட்டுமின்றி இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரிய விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.