காவல் நிலையம் வந்த சிறுவன்! காரணம் கேட்டு அதிர்ந்த போலீஸ் அதிகாரி!
காவல் நிலையத்திற்கு வந்த எட்டு வயது சிறுவன் தனது தந்தையின் மீது புகார் கூறிய நிகழ்வை கேட்டு அங்கிருந்த போலிஸ் அதிகாரி அதிர்ச்சியும் வியப்பையும் ஒருசேர அடைந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் குஷி நகர் மாவட்டத்தில் காசியா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி வருபவர் அசுதோஷ் குமார் திவாரி. மிகவும் திறமையான அதிகாரியான இவர் நேர்மைக்கும் கண்டிப்புக்கும் பெயர் பெற்றவர்.
அவர் பணியில் இருந்த பொழுது போலீஸ் அங்கிள் என்ற குரல் கேட்டுள்ளது. குரல் வந்த திசையில் பார்த்த பொழுது சிறுவன் ஒருவன் அங்கு நின்று கொண்டிருந்தான். காவல் நிலையத்தில் சிறுவனுக்கு என்ன வேலை என்ற ஆச்சரியமடைந்த அதிகாரி அவனை கூப்பிட்டு விசாரித்தார்.
விசாரணையில் அந்த சிறுவனின் பெயர் ஆரியன் மவுரியா வயது 8 என்பதும் மூன்றாம் வகுப்பு படிக்கும்அவனது தந்தை பெயர் தர்மப்பிரியா மவுரியா என்பதும் காசியா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருவதும் தெரியவந்தது.
அவன் தனது தந்தை மீது புகார் அளிப்பதற்காக அங்கு சென்றுள்ளான். அவனது புகாரை திவாரியும் மற்ற காவலர்களும் கேட்டறிந்தனர். அந்த சிறுவன் திவாரியிடம் அவனது தந்தை தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் சண்டை செய்வதாக கூறியுள்ளான்.
தனது தந்தை குடிக்காமல் இருக்க அனைத்து மது கடைகளையும் மூட வேண்டும். அப்பொழுதுதான் அவர் குடிக்காமல் இருப்பார். எனது ஒட்டு மொத்த குடும்பமும் அவரது குடிப்பழக்கத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனாலயே நான் அவர் மீது புகார் கூற காவல் நிலையம் வந்துள்ளேன் என்று காவல் அதிகாரியிடம் தெரிவித்துள்ளான்.
சிறுவனின் இந்த புகாரால் திவாரியும் மற்ற காவலர்களும் மிகுந்த அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தனர். உடனே உயர் அதிகாரி சிறுவனிடம் ஆறுதல் கூறி உனது தந்தையை அழைத்து நான் சத்தம் போடுகிறேன் என்று தெரிவித்தார். அத்துடன் உடனடியாக சிறுவனது தந்தையை காவல் நிலையத்திற்கு வரவழைத்து இனிமேல் குடிக்க கூடாது என கண்டிப்புடன் ஆலோசனை கூறி உறுதிமொழி எடுக்க வைத்தார்.
பிறகு சிறுவனுக்கு புத்தகங்கள் பேனா இனிப்புகள் உள்ளிட்டவற்றை வழங்கியது மட்டுமில்லாமல் ஆரியனின் கல்வி செலவுகளுக்கும் உதவ முன்வந்து ஒரு பொறுப்புள்ள அதிகாரியாக தனது கடமையை சிறப்பாக செய்துள்ளார் திவாரி.