முடிவுக்கு வரப்போகும் வழக்கு.. அதானியை காப்பாற்றுவார ட்ரம்ப்!!

0
75

அமெரிக்க நீதிமன்றத்தில் இந்திய தொழிலதிபர் கவுதம் அதானி மீது பதிவு செய்யப்பட்டுள்ள லஞ்ச வழக்கு இப்போது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவின் சூரிய மின்சார ஒப்பந்தங்களில் முறைகேடு செய்ததாக அமெரிக்க நீதித்துறையின் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால், டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக பதவியேற்றால், இந்த வழக்கில் அதானி குழுமத்திற்கு சாதகமான முடிவுகள் நிகழலாம் என இந்திய-அமெரிக்க வழக்கறிஞர் ரவி பத்ரா பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

அதானி வழக்கின் பின்னணி

அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புகாரின் படி, அதானி குழுமம் 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் சூரிய மின்சார திட்டம் தொடர்பான ஒப்பந்தத்தைப் பெற ரூ.2,239 கோடி ($265 மில்லியன்) லஞ்சம் வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் அதானி குழுமம், அமெரிக்க வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் ₹25 ஆயிரம் கோடி நிதி திரட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்கப் பங்கு பரிவர்த்தனை ஆணையம் மற்றும் நியூயார்க் ஃபெடரல் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் கவுதம் அதானி மட்டுமின்றி, அவரது உறவினர்கள் சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் உள்ளிட்ட ஆறு பேரின் பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளது. வழக்கில் குற்றச்சாட்டுகள் சர்வதேச பொருளாதார மடலிலும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

ட்ரம்பின் பதவியேற்பால் வழக்கின் நிலைமை மாறுமா?

இந்த வழக்கு தொடரும் நிலையில், டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராக பதவியேற்றால், இந்த வழக்கின் நிலமை முற்றிலும் மாறலாம் என வழக்கறிஞர் ரவி பத்ரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:
“புதிய அதிபர்கள் பதவியேற்றால், தங்கள் தலைமையில் புதிய குழுவினரை கொண்டு வருவார்கள். அதேபோல, ட்ரம்பும் தனது புதிய குழுவை அமைப்பார். ட்ரம்ப் தற்போதைய எஃப்.பி.ஐ செயல்பாடுகளால் அதிருப்தியில் உள்ளார். அவர் பதவியேற்ற பின், தன்னுடைய அதிகாரத்தில் எப்.பி.ஐ மற்றும் பிற சட்ட அமலாக்க அமைப்புகளை கட்டுப்படுத்துவார். அவர், யாரை விசாரிக்க வேண்டும் மற்றும் யாரை விசாரிக்க வேண்டாம் என தீர்மானிக்கிறார்.

“இதை அடிப்படையாகக் கொண்டு, அதானி தரப்பில் இருந்து இந்த வழக்கை மாற்றி அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளலாம். ட்ரம்ப் நிர்வாகம், குற்றச்சாட்டுகளை தகுதியற்றதாக அல்லது குறைபாடுடையதாக கருதினால், அதானி மீதான சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் கைவிடப்படலாம். இந்த நிலைமையை அதானி தரப்பு பயன்படுத்த முயற்சிக்கலாம்,” என அவர் தெரிவித்தார்.

அதானியின் மறுப்பு

இந்த வழக்கு குறித்த அதானி குழுமம் கடுமையான மறுப்புகளை வெளியிட்டுள்ளது. அமெரிக்க நீதித்துறையின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் அடிப்படையற்றவை எனவும் எந்த விதமான முறைகேடும் செய்யப்படவில்லை எனவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

சர்வதேச மற்றும் இந்திய அரசியலில் அதிர்வு
இந்த வழக்கின் தாக்கம் சர்வதேச அளவிலும், இந்திய அரசியலிலும் பரவலாக காணப்படுகிறது. லஞ்ச விவகாரத்தில் அதானி குழுமத்தின் பெயர் இடம் பெற்றுள்ள நிலையில், இது இந்திய அரசியல் குழப்பத்திற்கு இடம் தந்துள்ளது.
ட்ரம்பின் மீண்டும் பதவியேறல் இந்த வழக்கின் முடிவை எப்படி தீர்மானிக்கும் என்பதை பொறுத்தே சூழல் வெளிப்பட இருக்கிறது. தற்போதைய நிலைமையில் வழக்கின் நிலை என்னவாகும் என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.