தேர்வுகளுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஹிஜாப் வழக்கில் தலைமை நீதிபதி கருத்து!

0
150

தேர்வுகளுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஹிஜாப் வழக்கில் தலைமை நீதிபதி கருத்து!

கர்நாடகத்தில் மாநிலத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரி ஒன்றில் அங்கு பயிலும் மாணவர்களுக்கு சீருடை கட்டுப்பாட்டை கொண்டுவந்து இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்குள் ஹிஜாப் அணிய தடை விதித்தது கல்லூரி நிர்வாகம். இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த மாநிலத்தில் இது பெரும் பிரச்சனையானதை தொடர்ந்து கர்நாடக அரசும் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் மதத்தை வெளிப்படுத்தக்கூடிய ஆடைகளை அணிந்து செல்ல தடை விதித்தது. இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் மற்றும் கர்நாடக அரசு கொண்டு வந்துள்ள இந்த ஆடை கட்டுபாட்டுக்கு தடை விதித்து பள்ளி, கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதிக்கக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், கடந்த மார்ச் 15-ந் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் மதம் சார்ந்த ஆடைகளை அணிய விதிக்கப்பட்ட தடை தொடரும் எனக் கூறி ஹிஜாப் தொடர்பாக தாக்கல் செய்திருந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், இதை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி முறையிடப்பட்டது. ஆனால் இதை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம் ஹோலி பண்டிகைக்கு பிறகு இந்த வழக்கை விசாரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தது.

இந்நிலையில் இஸ்லாமிய மாணவிகள் தரப்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஹிஜாப் தீர்ப்பின் மேல்முறையீட்டு மனுக்களை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும்  என்றும், தேர்வுகள் வருவதை கருத்தில் கொண்டு விசாரணைக்கான தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, “தேர்வுகளுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை உணர்ச்சிபூர்வமாக்க வேண்டாம் எனக் கூறி அவரின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்.”