18 வயது முதல் 50 வரையிலான பெண்களுக்கு மாதம்தோறும் வழங்கப்பட்டு வரும் ஆயிரம் ரூபாய் நிதி உதவியை ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அதிரடியாக உயர்த்தியுள்ளார்.
சமீபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியுடன் சேர்ந்த காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி, பிஜேபி கூட்டணி போட்டியிட்டன. இதில் இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றது.
ஏற்கனவே முதல்வராக ஹேமந்த் சோரன் அரசாங்கம் இருந்தபோது 18 முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கி வந்தது. இதனிடையே தற்போது நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் ஹேமந்த் சோரன் நேற்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார். அங்கு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பர்ஹைட் தொகுதியில் போட்டியிட்ட ஹேமந்த் 39 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று வெற்றி பெற்று இருந்தார்.
பதவியேற்பு விழா முடிந்ததும் முதல்வர் ஹேமந்த் நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி உதவியானது அடுத்த மாதம் டிசம்பர் மாதம் முதல் ரூ.2500 ஆக உயர்த்தப்பட்டு வழங்கப்படும் என தெரிவித்தார். இதற்கான முடிவு மந்திர சபை கூட்டத்தில் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
நான்காவது முறையாக ஜார்க்கண்ட்- இன் முதல் மந்திரியாக பதவி ஏற்கும் ஹேமந்த் சோரனுக்கு 49 வயதாகிறது. அவரது இந்த அறிவிப்பினை கேட்ட அம்மாநில பெண்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.