இரண்டு ஆண்டுகளாகியும் அரசு ஊழியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றவில்லை என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி கூட்டமைப்பு சங்க மாநில தலைவர் மணிமேகலை கரூரில் பேட்டி.
கரூர் மாநகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு சார்பில் மத்திய மண்டலம் மற்றும் மேற்கு மண்டல நிர்வாகிகளுக்கு இயக்க பயிலரங்கம் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.
இன்று தொடங்கிய பயிலரங்கத்தில் கல்விக் கொள்கை, எதிர்கொள்ளும் சவால்கள், அறிய வேண்டிய அரசாணைகள் உள்ளிட்டவைகளை பயிற்சி பட்டறை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் மணிமேகலை செய்தியாளர் சந்திப்பில், தேர்தல் வாக்குறுதியான புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை மாற்றி பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்கவும், மத்திய அரசுக்கு இணையான ஊதிய வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர்களுக்கு தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்த முதல்வர் இரண்டு ஆண்டுகள் முடிந்தும் இதுவரை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
சரண்டர் ஒப்படைப்பு தேதி குறிப்பிடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி நிறுத்தி வைப்பது போன்ற பல்வேறு நலன்களை ஆசிரியர் கூட்டமைப்புக்கு எதிராக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஒரு ஆசிரியர் என்று 1000-க்கு மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. எனவே காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணி தவிர வேறு பணிகளும் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. கற்பிக்கும் பணிகள் மட்டுமே ஆசிரியர்களுக்கு தர வேண்டும். பணி பாதுகாப்பு சட்டத்தை அரசு கொண்டுவர வேண்டும்.
காலை உணவு திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்க முன்வர வேண்டும். காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் வழங்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.