Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அருவியில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை! துரிதமாக காப்பாற்றிய இளைஞர்!

அருவியில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை! துரிதமாக காப்பாற்றிய இளைஞர்!

குற்றால அருவியில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு வயது குழந்தையை நபர் ஒருவர் துரிதமாக மீட்டது இணையதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.

அருவியில் குளிப்பது என்றாலே அனைவருக்கும் குதூகலம் தான். அதுவும் குற்றால அருவி என்றாலே சொல்லவே வேண்டாம் மனசு சந்தோசத்தில் ஆர்ப்பரிக்கும். அப்படி நினைத்து குடும்பத்துடன் குற்றாலத்துக்கு குளிக்கச் சென்ற ஒரு பெண் குழந்தையானது அருவியில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த பரபரப்பு சம்பவம் பின்வருமாறு,

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகள் சுற்றுலாவிற்கு பெயர் போன இடமாகும். கண்ணைக் கவரும் வண்ணம் சுற்றிலும் பசுமையான இயற்கை நிகழ்வுகளோடு இந்த அருவி அமைந்துள்ளது. இதில் உள்ள பழைய குற்றால அருவியில் தற்போது தண்ணீர் வரத்து சற்று அதிகமாக உள்ளது. இதனால் அதில் குளிக்க சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதேபோல் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் தனது குடும்பத்தினரோடு விடுமுறையைக் கழிக்க தென்காசியில் உள்ள பழைய குற்றாலத்துக்கு வந்துள்ளார். அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் அருவியில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது அவர்களின் 4 வயது பெண்குழந்தை திடீரென தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டாள்.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பலரும் பதறித் துடித்தனர். இந்நிலையில் அங்கிருந்த சக சுற்றுலா பயணிகளில் ஒரு இளைஞர் துரிதமாக செயல்பட்டு அருவியில் இறங்கி தண்ணீரில் அடித்துச் சென்று கொண்டிருந்த குழந்தையை ஒரு பாறை இடுக்கில் சிக்க வைத்து லாவகமாக குழந்தையை காப்பாற்றினார். சிறு காயங்களுடன் இளைஞரால் பத்திரமாக மீட்கப்பட்ட குழந்தை மேலே கொண்டுவரப்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.

Exit mobile version