இபிஸ் நடத்திய மாநாடு உப்பு சப்பு இல்லாமல் முடிந்தது… செய்தியாளர்கள் சந்திப்பில் ஒபிஎஸ் பேட்டி…
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நடத்திய எழுச்சி மாநாடு தேவையே இல்லாத ஒன்று என்றும் உப்பு சப்பு இல்லாமல் முடிந்துள்ளதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் முதல்வர் ஒ பன்னீர் செல்வம் பேட்டியளிந்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் தலைமையில் நேற்று(ஆகஸ்ட்20) மதுரை மாவட்டத்தில் அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பதவியேற்ற பின்னர் நடைபெறும் முதல் பொதுக்கூட்டம் இது.
இந்த வீர எழுச்சி மாநாடு மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெருந்திரளான அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட சர்வ சமய பெரியோர்கள் எடப்பாடி பழனிசாமி அவர்களின் மக்கள் சேவையை பாராட்டி புரட்சி தமிழர் என்ற பட்டத்தை அளித்தனர்.
இதையடுத்து ஓ பன்னீர் செல்வம் அவர்களின் அணி சார்பாக நமது புரட்சி தொண்டன் என்ற பெயரில் நாளிதழ் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து ஒ பன்னீர் செல்வம் அவர்கள் பேட்டியளித்தார். அந்த பேட்டியில் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் நேற்று(ஆகஸ்ட்20) நடைபெற்ற அதிமுக எழுச்சி மாநாடு குறித்து பேட்டி அளித்தார்.
மாநாடு குறித்து செய்தியாளர்களுக்கு ஓ பன்னீர் செல்வம் அவர்கள் அளித்த பேட்டியில் “மதுரையில் பழனிசாமி அவர்கள் நடத்திய மாநாடு தேவை இல்லாத ஒன்று. பழனிசாமி அவர்கள் கூட்டிய மாநாடு உப்பு சப்பு இல்லாமல் முடிந்துள்ளது. எதிர் வரும் லோக்சபா தேர்தலில் கட்டாயமாக நாங்கள் போட்டியிடுவோம். தேர்தலில் போட்டியிட்டு நாங்கள் யார் என்று நிரூபிப்போம். அதன் மூலமாக அதிமுக நம்மிடம் திரும்பி வரும்” என்று கூறினார்.