ரீல்ஸ் பார்த்ததற்கு கண்டித்தேன் அதனால் தான் எனது மகள் கோபித்துக் கொண்டு சென்றார் – கோவையில் இருந்து காணாமல் போன சிறுமியின் தாயார் பேட்டி!
கோவை ஒண்டிபுதூர் பகுதியில் இருந்து மாயமான சிறுமி பொள்ளாச்சியில் மீட்கப்பட்டு ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். நேற்று முன்தினம் ஒண்டிபுதூர் பகுதியில் இருந்து 12 வயது சிறுமி மாயமானதாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் அவரது தந்தை சுதாகரன் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து மாநகர காவல் துறையினர் 5 தனி படை அமைத்து தேடி வந்தனர். அதேபோல அனைத்து காவல் நிலையங்களுக்கும் சிறுமியின் புகைப்படம் மற்றும் தகவல்கள் அனுப்பப்பட்டது. மேலும் கோவை மாநகர காவல்துறையின் சார்பில் சமூக ஊடகங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதே சமயத்தில் சிறுமி ஒண்டிபுதூர் பகுதியில் இருந்து பேருந்தில் ஏறுவதற்காக செல்லும் காட்சிகளும், பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் காட்சிகளும் வெளியாகியது.
இந்த நிலையில் பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே சிறுமியை மாவட்ட காவல் துறையினர் நேற்று மாலை மீட்டு உள்ளனர். தொடர்ந்து சிறுமி மாநகர காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். பெற்றோருக்கும் சிறுமி கிடைத்த தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து பொள்ளாச்சியில் இருந்து சிறுமி கோவை ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
தொடர்ந்து போலீசார் நேற்று இரவு ஒரு மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். இரவு பத்து முப்பது மணி அளவில் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அப்போது காவல்நிலையத்தில் வெளியே இருந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் கைகளை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து காணாமல் போன சிறுமியின் தாயார் சசிகலா கூறும்போது,
எனது மகள் செல்போனில் ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் பார்த்துக் கொண்டிருந்தார். இப்படியே இருந்தால் ஹாஸ்டலுக்கு அனுப்பி விடுவேன் என திட்டினேன். இதற்கு பயந்து அவர் கிளம்பி போய்விட்டார் இதை நான் எதிர்பார்க்கவில்லை. எப்போதுமே நான் சொல்வதுதான் போன் பார்க்காதே படி என, ஹாஸ்டலுக்கு அனுப்பி விடுவேன் என்று சொன்னதால் பயந்துவிட்டார்.
எனது மகள் கிடைக்க அனைவரும் உதவி செய்தார்கள். காவல்துறையும் இரவெல்லாம் தூங்காமல் உதவி செய்தார்கள். மிகவும் ஒத்துழைப்பாக இருந்தார்கள். மிக்க நன்றி. செல்போன் பயன்படுத்துவதால் திட்டும் அச்சத்தில் சென்றதாக தெரிவித்தார். காவல்துறையினர் தற்போது எனது மகளை பொள்ளாச்சியில் இருந்து மீட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பின்னர் தந்தை சுதாகர் கூறும் போது, அப்பாக்கள் எப்பொழுதும் செல்லமும் கொடுப்போம் கண்டிக்கவும் செய்வோம் ஆனால் இந்த மாதிரி முடிவுகள் குழந்தைகள் எடுக்கக் கூடாது. எனது குழந்தை கிடைக்க காவல்துறை உட்பட பொதுமக்கள் நண்பர்கள் என அனைவரும் உதவி செய்தீர்கள் அனைவருக்கும் நன்றி. குழந்தைகள் யூடியூப் போன்றவற்றைப் பத்திரமாக பயன்படுத்த வேண்டும் என்பது எனது கருத்து, இவ்வாறு அவர் தெரிவித்தார்.