தனியார் மதுபான கூடத்தை அப்புறப்படுத்த கோரிய தீர்மானம்! கவுன்சிலர்கள் கோரிக்கை!
தேனி மாவட்டம் பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மதுபான கூடம் இயங்கி வருகின்றது. பெரியகுளத்தின் பிரதான சாலையாக உள்ள இச்சாலையில், மகாத்மா காந்தி சிலை, கிறிஸ்தவ வழிபாட்டு தலம்,பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் மற்றும் போக்குவரத்து நிறுத்தங்கள் உள்ளன.
இச்சாலை வழியாக தினமும் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதசாரிகளாகவும், வாகன ஓட்டிகளாகவும், சென்று வருகின்றனர். குறிப்பாக பெண்கள் இப்பகுதிகளில் அதிகம் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் மதுபான கூடத்தில் மது அருந்திவிட்டு வெளியே வரும் மது பிரியர்களால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வருவதோடு, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது. மேலும் பொதுமக்கள் பலரும் மது பிரியர்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான கூடத்தை அப்புறப்படுத்த சிறப்பு தீர்மானம் இயற்றிட வேண்டும் என்று வார்டு உறுப்பினர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அவர்களது கோரிக்கையை தொடர்ந்து இவை சம்மந்தமாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுவதாக நகர்மன்ற தலைவர் சுமிதா உறுதி அளித்தார்.