Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தவறான சிகிச்சையளித்த மருத்துவர் நோயாளிக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு

தவறான சிகிச்சையளித்த மருத்துவர் நோயாளிக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு

கரூரில் சிறுநீரக கல்லுக்கு சிகிச்சை அளித்தபோது சிறுநீர்க் குழாயில் ஏற்பட்ட துவாரத்தை நோயாளியிடம் தெரிவிக்காமல் மறைத்த தனியார் மருத்துவமனை மருத்துவர், நோயாளிக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு வழங்க மாவட்ட நுகர்வோர் ஆணையம் அதிரடி உத்தரவு.

கரூர் சுங்கவாயில் பகுதியைச் சேர்ந்தவர் நல்லாத்தாள்(47). இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

இவருக்கு இடுப்பு பகுதியில் தீராத வலி இருந்ததால் கரூர் பிரம்மதீர்த்தம் சாலையில் உள்ள தனியார் சிறுநீரக சிறப்பு மருத்துவமனைக்கு கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி சிகிச்சைக்கு சென்றுள்ளார். நல்லாத்தாள் வேறு இடத்தில் எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட்டை மருத்துவரிடம் காட்டியுள்ளார்.

அதை பார்த்த மருத்துவர் நல்லாத்தாளுக்கு 2 சிறுநீரகங்களிலும் கல் அடைப்பு உள்ளதாகவும், உடனடியாக லேசர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும்கூறி அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். மறுநாள் அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது நல்லாத்தாளின் சிறுநீர் குழாயில் துவாரம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மருத்துவர் இதனை நல்லத்தாளிடம் தெரிவிக்காமல் அவரை உள்நோயாளியாக வைத்து சிகிச்சை அளித்துள்ளார். அப்போது நல்லாத்தாளுக்கு கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவரிடம் கேட்டபோது, வலி தானாக சரியாக விடும் என மருத்துவர் கூறி உள்ளார். மேலும், ஜனவரி 27ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

சிகிச்சைக்குப் பிறகு நல்லாத்தாளால் உட்காரவோ, நிற்கவோ, நடக்கவோ முடியாததால் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றபோது தான் சிறுநீர்க் குழாயில் துவாரம் உள்ளதை மருத்துவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து மருத்துவரின் பரிந்துரை பேரில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ரூ.4.20 லட்சத்தில் நல்லத்தாளுக்கு 3 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.

இதையடுத்து, மருத்துவர் கவனக்குறைவாக லேசர் அறுவை சிகிச்சை செய்ததால் உடல் வலி, மன உளைச்சல், செலவு, வருமான இழப்பு ஆகியவை தனக்கு ஏற்பட்டதாகக் கூறி ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி கரூர் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் நல்லத்தாள் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி மனு தாக்கல் செய்தார்.

வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் பாலகிருஷ்ணன், உறுப்பினர் ரத்தினசாமி ஆகியோர், “மருத்துவர் தனது பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதால் நல்லாத்தாளுக்கு ஏற்பட்ட உடல் வலி, மன உளைச்சல், செலவு, வருமான இழப்பு ஆகியவற்றிற்காக இழப்பீடாக ரூ.18,03,181 வழங்க வேண்டும்.

வழக்கு தாக்கல் செய்த ஆண்டு முதல் இழப்பீடு தொகை வழங்கும் நாள் வரை 7.5 சதவீத வட்டியுடன் 2 மாதங்களுக்குள் இந்த தொகையை வழங்க வேண்டும்” என்று நேற்று உத்தரவிட்டனர்.

Exit mobile version