Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொங்கு மண்டலத்தில் வாகை சூடிய திமுக! அபார வெற்றி!

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் ,தர்மபுரி, நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கியது தான் கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. இதனை அதிமுகவின் கோட்டை என்று அந்த கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள். கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான தேர்தல்களில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தது கொங்குமண்டல வாக்குகள்தான் என்று தெரிவிக்கப்படுகிறது.

சென்ற வருடம் நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக தமிழகத்தின் மற்ற பகுதிகளில் குறைவான பகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை இழந்திருந்தாலும் கோயமுத்தூரில் உள்ள 10 தொகுதிகளையும் அந்த கட்சி கைப்பற்றியது. அதேபோல சேலம், திருப்பூர், ஈரோடு, போன்ற பகுதிகளிலும் அதிக இடங்களை பிடித்து எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது அதிமுக.

தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த போதும்கூட ஆளும் கட்சியால் கோயமுத்தூரில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற இயலவில்லை. ஆனாலும் உள்ளாட்சித் தேர்தலில் கொங்கு மண்டலத்தை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் திமுகவை சேர்ந்தவர்கள் பல்வேறு வியூகங்களை வகுத்தார்கள்.

மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் அதற்கான பொறுப்பை திமுக தலைமை ஒப்படைத்தது. அவருடைய வழிகாட்டுதலில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியை செய்து தற்சமயம் வெற்றிக்கனியை திமுக பறித்திருக்கிறது.

அதாவது கோயம்புத்தூர் மாநகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியிருக்கிறது, இதைத் தவிர கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வால்பாறை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், காரமடை, கூடலூர், மதுக்கரை, கருமத்தம்பட்டி, உள்ளிட்ட நகராட்சிகளிலும் அந்த கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. அதேபோல பேரூராட்சிகளிலும் ஆளும் கட்சியே வெற்றி பெற்றிருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மூலமாக கொங்கு மண்டலத்தில் அதிமுகவினருக்கு திமுக அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது. கோயம்புத்தூரை போல மதுரை கொங்கு மண்டலங்களிலும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி உள்ளிட்டவைகளில் திமுக கூட்டணி வெற்றியை பெற்றிருக்கிறது. ஈரோடு மாநகராட்சியை கைப்பற்றியிருக்கின்ற திமுக மாவட்டத்தில் உள்ள பவானி, கோபி, சத்தியமங்கலம், புளியம்பட்டி, என்று 4 நகராட்சிகளில் ஆளும் கட்சியே கைப்பற்றியிருக்கிறது.

அதேபோல திருப்பூர் மாநகராட்சியில் திமுக வெற்றி பெற்றிருக்கிறது மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளில் அந்தக் கட்சியை கைப்பற்றியிருக்கிறது. மொத்தமுள்ள 15 பேரூராட்சிகளில் 14 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றிய சூழ்நிலையில், 1 பேரூராட்சியை மட்டும் அதிமுக கைப்பற்றியிருக்கிறது.

அதேபோன்று சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் மாநகராட்சியை திமுக கைப்பற்றியது அங்குள்ள பெரும்பாலான நகராட்சிகளில் தன்வசப்படுத்தி அபார சாதனையை படைத்திருக்கிறது. சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 31 பேரூராட்சிகளில் 25 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியிருக்கிறது. 1 பேரூராட்சியில் அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த ஊரான எடப்பாடி நகராட்சியை ஆளுங்கட்சியான திமுக வெற்றி பெற்றிருக்கிறது. சேலம் நெடுஞ்சாலை நகரில் எடப்பாடி பழனிச்சாமியின் வீடு இருக்கிறது. அவருடைய வீடு இருக்கின்ற 23வது வார்டிலும் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார். இது எடப்பாடி பழனிச்சாமியை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

Exit mobile version