தேர்தல் புறக்கணிப்பு எதிரொலி.. ஆட்சியரின் அதிரடி நடவடிக்கையால் ஏற்பட்ட மாற்றம்..!!
தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் பல ஆண்டுகளாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் தேர்தலை புறக்கணித்து மக்கள் அவர்க்ளின் எதிர்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர். இதனால் பெரும்பாலான பகுதிகளில் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. இந்நிலையில், தேர்தல் புறக்கணிப்பால் அதிரடி மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
அதாவது மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள கள்ளிக்குடி – காரியாபட்டி சாலையில் கே சென்னம்பட்டி கிராமம் உள்ளது. இங்கு கேரளாவை சேர்ந்து தனியார் உர ஆலை ஒன்று இயங்கி வருகிறது. கோழிக்கழிவுகள் மற்றும் மருத்துவக் கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் கிட்டத்தட்ட 5 கிராம மக்கள் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
இதனால் சென்னம்பட்டி, குராயூர், ஓடைப்பட்டி, மேலப்பட்டி மற்றும் பேய்குளம் ஆகிய 5 ஊரை சேர்ந்த மக்கள் இந்த ஆலையை மூட வேண்டுமென கோரி மனு அளித்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு 5 கிராமங்களையும் சேர்ந்த மக்கள் திடீரென சாலையில் இறங்கி மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த வட்டாட்சியர் நடவடிக்கை எடுப்பதாக கூறி போராட்டத்தை கைவிட கூறினார். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம் என்று கிராம மக்கள் அப்போதே கூறியுள்ளனர். அதேபோல் நடவடிக்கை எடுக்காததால் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். அதன்படி 5,050 வாக்குகள் இருந்த பகுதியில் வெறும் 167 வாக்குகள் மட்டுமே பதிவானது.
இதனால் உர ஆலையை மூடுமாறு மாவட்ட ஆட்சியர் ஆணையிட்டுள்ளார். மேலும், சுற்றுச்சூழல் பொறியாளர்கள் மற்றும் மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.