இதற்கான நுழைவுத் தேர்வு இனி ஆன்லைனில் தான்! இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும்!
ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு பணிகள் இயக்குனர் எம் கே பாத்ரே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு இந்த ஆண்டு முதல் ஆன்லைன் முறையில் பொது நுழைவுத் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் என கூறியுள்ளார். காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் செய்தியாளர்களை சந்தித்து பேசும் பொழுது அவர் கூறியதாவது.
இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு பணி மூன்று கட்டங்களாக நடைபெறுகின்றது. கடந்த ஆண்டு வரை ஆள்சேர்ப்பு பணி உடல் தகுதி தேர்வு அதனை தொடர்ந்து மருத்துவ தேர்வு நடத்தப்படும். பொது நுழைவுத் தேர்வுக்கு தகுதி பெற்றவர்கள் மட்டுமே வர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது முதல் கட்டமாக ஆன்லைனில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
அந்த ஆன்லைன் தேர்வில் தகுதி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டு இரண்டாம் கட்டமாக ஆள்சேர்ப்பு பணிக்கு அழைக்கப்படுவார்கள். அதனை தொடர்ந்து இரண்டாம் கட்டத்தில் அவர்களுக்கு உடல் தகுதி தேர்வு மற்றும் உடல் அளவீட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுவர். அதில் தகுதி பெற்றவர்கள் மருத்துவ பரிசோதனையான மூன்றாம் கட்டத்திற்கு செல்வார்கள். ஆன்லைன் சிஇஇ மற்றும் உடல்நிலை தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதி பட்டியல் வெளியிடப்படும்.
ஆன்லைன் தேர்வுக்கான பதிவு கடந்த பிப்ரவரி 16ம் தேதி தொடங்கிய நிலையில் இம்மாதம் 15ஆம் தேதி முடிவடையும். மேலும் தேர்வர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ராணுவத்தில் சேர பதிவு செய்யலாம். இந்த பதிவு முடிந்து ஒரு மாதம் கழித்து ஏப்ரல் 17ஆம் தேதி ஆன்லைன் தேர்வு நடைபெற வாய்ப்புள்ளது தேர்வு தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மேலும் பல விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் .ஆன்லைன் நுழைவுத் தேர்வுகள் இந்தி ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.