மூட்டை தூக்கிய முன்னாள் அமைச்சர்.. இவ்வளவு எளிமையான மனிதரா..??
பொதுவாக அரசியல்வாதிகளும் சரி திரைபிரபலங்களும் சரி அவர்களுக்கான பணிகளை செய்வதற்கு பணியாட்களை நியமித்து வைத்திருப்பார்கள். வீடு முதல் அலுவலகம் வரை அனைத்து பணிகளையும் செய்வதற்கு தனித்தனியாக ஆட்கள் இருப்பார்கள். ஆனால் பணியாட்கள் பற்றாக்குறை காரணமாக அமைச்சர் ஒருவர் மூட்டை தூக்கிய சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது.
அந்த அமைச்சர் வேறு யாருமல்ல புதுச்சேரி மாநிலத்தில் முன்னாள் வேளாண் துறை அமைச்சராக பணியாற்றி வந்த கமலக்கண்ணன் தான். இவர் அமைச்சராக பணியாற்றி இருந்தாலும், காரைக்கால் அடுத்த அம்பகரத்தூர் பகுதியில் விளைநிலங்களில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் கமலக்கண்ணன் அவரது வயலில் அறுவடை செய்த நெல்களை விற்பனை செய்வதற்காக தனியார் நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
அந்த சமயத்தில் நெல் மூட்டைகளை இறக்குவதற்கு பணியாட்கள் குறைவாக இருந்துள்ளனர். இதனால் சற்றும் யோசிக்காத அமைச்சர் கமலக்கண்ணன் தானே களத்தில் இறங்கினார். அதன்படி டிராக்டரில் இருந்த நெல் மூட்டைகளை அவரே இறக்கி வைக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதனை கண்ட பலரும் இவ்வளவு எளிமையான மனிதரா? முன்னாள் அமைச்சர் என்ற பந்தா சிறிதும் இல்லாமல் மூட்டை தூக்குகிறாரே என வியந்து வருகிறார்கள். கமலக்கண்ணன் அமைச்சராக இருந்த சமயத்திலேயே வயலில் உழுதல், விதை தெளித்தல், களை எடுத்தல் போன்ற பணிகளை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.