Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நடைபயிற்சி மேற்கொண்டிருந்த முன்னாள் ஊராட்சி தலைவர்… மர்ம நபர்களால் வெட்டிக் கொலை!!

 

நடைபயிற்சி மேற்கொண்டிருந்த முன்னாள் ஊராட்சி தலைவர்… மர்ம நபர்களால் வெட்டிக் கொலை…

 

திருவள்ளூர் மாவட்டத்தில் செங்குன்றம் பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த அதிமுக கட்சியை சேர்ந்த முன்னாள் ஊரட்சித் தலைவர் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியில் இருக்கும் மொண்டியம்மன் நகர், திலகர் தெருவில் பார்த்திபன் வசித்து வருகிறார். இவர் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை அதிமுக கட்சியின் சார்பாக பாடியநல்லூர் ஊராட்சித் தலைவராக இருந்துள்ளார்.

 

முன்னாள் ஊராட்சித் தலைவராக இருந்த பார்த்திபன் அதன் பின்னர் தற்பொழுது திருவள்ளூர் கிழக்கு பகுதியின் அதிமுக அம்மா பேரவையின் இணை செயலாளராக இருந்து வருகிறார். பார்த்திபன். அவர்களுக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இதில் ஒரு மகன் மருத்துவராகவும் மற்றொரு மகன் வழக்கறிரஞராகவும் பணி புரிந்து வருகின்றனர்.

 

பார்த்திபன் மீது செம்மரம் கடத்தியதாக ஆந்திரா-கடப்பா, சித்தூர் ஆகிய காவல்நிலையங்களில் வழக்குகள் உள்ளது. இதற்காக இவர் சிறைக்கு சென்று ஜாமினில் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த பார்த்திபன் அவர்களை மர்ம கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

பாடியநல்லூர் அங்காள ஈஸ்வரி கோவில் திடல் அருகே தினமும் நடைபயிற்சா மேற்கொள்வதை வழக்கமாக கொண்ட பார்த்திபன் வழக்கம்போல அந்த பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அங்கு 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் பார்த்திபன் அவர்களை சுற்றி வளைத்து கத்தி, அரிவாள் ஆகியவற்றை வைத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் படுகாயம் அடைந்த பார்த்திபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் உயிரிழந்த பார்த்திபன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Exit mobile version