Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உணவுகூட வழங்கவில்லை – திமுக அரசு மீது முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு 

ADMK D. Jayakumar

ADMK D. Jayakumar

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உணவுகூட வழங்கவில்லை – திமுக அரசு மீது முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

கடந்த சில நாட்களாக சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழையால் பொதுமக்கள் அனைவரும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு ஆளும் அரசு உணவு கூட வழங்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை புளியந்தோப்பில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரியாணி வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னையில் பெய்த இந்த 2 நாள் மழைக்கே திமுக அரசு திணறுகிறது. அதை சரியாகக் கையாள முடியவில்லை. அதனால் பல இடங்களில் நீர் தேங்கி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவுகூட வழங்கவில்லை. அம்மா உணவகங்கள் மூலமாகக் கூட உணவு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு மாற்று இடம்கூட கொடுக்கவில்லை. அதிக அளவில் மழை பெய்ததால் பாதிப்பு அதிகமாக இருப்பதாக அமைச்சர்கள் கூறுகிறார்கள். எத்தனை செமீ மழை பெய்தாலும் மக்களை அரசு பாதுகாக்க வேண்டும். அரசு எடுத்த நடவடிக்கையால் கொளத்தூரில் மழைநீரே தேங்காது என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். ஆனால் அங்கும் தண்ணீர் தேங்கியுள்ளது.

2015-க்கு முன்பு அதிமுக அரசு எடுத்த நடவடிக்கையால் 2,400 கிமீ நீளத்துக்கு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் திட்டம் தீட்டப்பட்டது. அதில் 1,200 கிமீ நீளபணிகளை நாங்கள் முடித்துவிட்டோம். மீதம் உள்ள பணிகளைத்தான் இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. அதிமுக அரசு ஒன்றும் செய்யவில்லை என்று அமைச்சர்கள் கூறுகிறார்கள்.

அதிமுக அரசு செய்த பணிகளால் தான் இன்று பாதிப்புகுறைவாக உள்ளது. இல்லாவிட்டால் இதை விட அதிகமாக இருந்திருக்கும். 1000 கிமீ நீளத்துக்குமேல் தூர்வாரியதாகக் கூறுகிறார்கள். அதன் பிறகும் ஏன் மழைநீர் தேங்குகிறது என்பதை அவர்கள் விளக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Exit mobile version