Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குண்டர் சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டால் அரசுக்கு அபராதம் விதிக்கப்படும்! உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!

குண்டர் சட்ட கைது உத்தரவு சட்டத்திற்கு புறம்பாக இருப்பதாக கண்டறியப்பட்டால் அரசுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தென்காசி மாவட்டம் ஆத்தூர் வழியைச் சார்ந்த சுனிதா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனதில் சில விஷயங்களை குறிப்பிட்டு இருந்தார்.

அதாவது தன்னுடைய கணவர் ஜெயராமன் திருமங்கலம், ராஜபாளையம், செங்கோட்டை, 4 வழிச்சாலை திட்டத்திற்கு விவசாய நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக அமைதி வழியில் போராட்டம் நடத்தியதாக குறிப்பிட்டிருக்கிறார்.

அதோடு அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தென்காசி மாவட்ட ஆட்சியர் செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார். அதன் பெயரில் என்னுடைய கணவர் நெல்லை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதோடு தன்னுடைய கணவருக்கான கைது உத்தரவை அவசரகதியில் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்திருப்பதாக குறிப்பிட்டிருக்கின்ற அவர் விதிகளை பின்பற்றவில்லை என்று தெரிவித்துள்ளார். குண்டர் சட்ட கைது உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தன்னுடைய கணவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம் எஸ் ரமேஷ், என் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது, நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் தான் 51.2% அதாவது 1775 குண்டர் சட்ட கைது உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளனர். 2011 முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் தமிழகத்தில் தான் கொண்டர் சட்ட கைது நடவடிக்கைகள் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

அதிகார துஷ்பிரயோகம் செய்து கண் மூடித்தனமாக பொதுமக்களை காவலில் வைக்க சட்டத்தை அமல்படுத்தக்கூடியவர்களின் கைகளில் இருக்கின்ற ஒரு வசதியான மற்றும் சக்திமிக்க ஆயுதமாக குண்டர் சட்டம் தற்போது மாறியிருக்கிறது என்பது தெளிவாகிறது என குறிப்பிட்டிருக்கிறார்கள் நீதிபதிகள்.

பொது அமைதியை பாதுகாக்க கைது உத்தரவு தெரிவிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அல்லது காவல்துறை ஆணையருக்கு அதிகாரம் இருக்கிறது அதனை அங்கீகரிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது கைது. உத்தரவை அறிவுரை குழு ரத்து செய்யலாம், அல்லது உறுதி செய்யலாம். உறுதி செய்யப்பட்டால் 12 மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும்.

பொதுவான குற்றவாளிகள் மற்றும் விரும்பத் தகாதவர்களை கையாள்வதற்கு காவல் துறையின் விருப்பமான வேட்டைக்களமாக இந்த சட்டம் தற்போது மாறி இருக்கிறது.

இந்த வருடத்தில் மட்டும் 88% கைது உத்தரவுகளை இந்த நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது இந்த வழக்கில் மனுதாரரின் கணவர் பொது அமைதியை சீர்குலைப்பார் அல்லது பாதுகாப்பின்மையை உண்டாக்குவார் என்பதை தெளிவுபடுத்த எந்த விதமான ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை. குண்டர் சட்ட கைது உத்தரவு தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

யாராவது தங்களை கேள்வி எழுப்பினால் அல்லது போராட்டம் நடத்தினால் ஒன்று சட்டத்தில் கைது செய்யலாம் என்ற மன எண்ணத்தில் அதிகாரிகள் இருப்பதாக தெள்ளத் தெளிவாக தெரிகிறது. சட்டம் கொண்டுவரப்பட்ட நோக்கத்திற்கு எதிராக இது போன்ற மனநிலை இருக்கிறது.

மனுதாரரின் கணவருக்கு எதிரான கைது உத்தரவு சட்டத்திற்கு புறம்பானது, அது ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவு பிறப்பித்துள்ள நீதிபதிகள், அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் மீறப்படும் போது இழப்பீடு வழங்க உத்தரவிடுவதற்கு இந்த நீதிமன்றம் அதிகாரம் படைத்தது என்று தெரிவித்திருக்கிறார்கள்.

ஆகவே அதனை மீறியதற்காக மனுதாரரின் கணவருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தொகையை தமிழக உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை கூடுதல் தலைமை செயலாளர் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள்.

மேலும் குண்டர் சட்ட கைது உத்தரவு சட்டத்திற்கு புறம்பாக இருப்பதாக வழக்குகளில் கண்டறியப்பட்டால் அரசுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். இந்த உத்தரவை மாநில அரசு நிர்வாகம் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் என்று இந்த நீதிமன்றம் நம்புகிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள்.

Exit mobile version