மாணவனை தலைகீழாக தொங்கவிட்ட தலைமை ஆசிரியர்! கதறிய பள்ளி வளாகம்!
உத்திர பிரதேசத்தில் பிஜப்பூர் என்ற ஊரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் மதிய உணவு நேரத்தின்போது மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சோனு யாதவ் என்ற இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் உடன் படிக்கும் வேறு ஒரு மாணவனை கடித்து விட்டான். அதனால் தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா, சிறுவனை மிரட்டி மன்னிப்பு கேட்குமாறு கூறியுள்ளார்.
ஆனால் சிறுவனோ அசரவில்லை. அதில் கோபமடைந்து, ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற தலைமை ஆசிரியர் அந்த மாணவனை மேல் தளத்தில் உள்ள மாடிக்கு இழுத்து சென்றார். அங்கு சென்று மன்னிப்பு கேட்காவிட்டால் நான் உன்னை மாடியில் இருந்து கீழே உன்னை போட்டு விடுவேன் என்று, அவனை மிரட்டியதோடு அவனது ஒரு காலைப் பிடித்து மாடியிலிருந்து தொங்க விட்டவாறு மிரட்டியுள்ளார்.
அப்போது சிறுவன் பயங்கரமாக அலறினான். அழவும் ஆரம்பித்தான். அந்த சத்தத்தை கேட்ட குழந்தைகள் அந்த வளாகத்தில் கூட்டம் கூட்டினார்கள். அதன்பிறகு தலைமை ஆசிரியர் அந்த மாணவனை விடுவித்து விட்டார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது பரவிக்கொண்டு இருக்கிறது.
அதன் காரணமாக தற்போது தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவனின் தந்தை ரஞ்சித் தலைமை ஆசிரியர் செய்தது தவறுதான். ஆனால் அவர் அன்பினால் தான் அதை செய்தார் என்றும், அதனால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றும் கூறியுள்ளார். சிறார் நீதி சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர் மனோஜ் விஸ்வகர்மா கூறும்போது, மாணவனின் தந்தை எங்களிடம் அவனை திருத்துமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் அவன் மிகவும் குறும்புக்காரன். அவன் மற்ற குழந்தைகளையும், ஆசிரியர்களையும் கடிக்கிறான். அதன் காரணமாக அவனுடைய அப்பா அவனை திருத்த சொன்னார். அதனால் அவனை பயமுறுத்த முயற்சித்துதான் அவ்வாறு செய்தேன் என்று கூறியுள்ளார்.