Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பழமை வாய்ந்த அந்தமான் சிறை!! பழைமை மாறாமல் மீட்டெடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!!

#image_title

பழமை வாய்ந்த அந்தமான் சிறை!! பழைமை மாறாமல் மீட்டெடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!!

பிரிட்டிஷ் ஆட்சியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக அதி தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளை நாடு கடத்துவது அல்லது அந்தமான் சிறையில் அடைப்பது வழக்கமாக இருந்துள்ளது. இது தவிர அந்தப் பகுதியில் சிறைச்சாலைகளை கட்டியும் அடைக்கப்பட்டனர். இதற்காக தமிழகத்தில் திருச்சி, தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட இடங்களில் 1885 ஆம் ஆண்டு சிறைச்சாலைகள் கட்டப்பட்டன.

இதில் தஞ்சாவூரில் ராமநாதன் ரவுண்டானா அருகே தெற்கு காவல் நிலையம் எதிரில் 52 ஏக்கர் பரப்பளவில் சிறைச்சாலை கட்டப்பட்டது. அந்தமான் சிறைச்சாலை போன்று காணப்படும் இந்த சிறைச்சாலை சூரிய கதிர்கள் விரிவடைவதை போன்று எட்டு நிலைகளாக கட்டப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நிலையிலும் தனித்தனி சிறை அறைகள் உள்ளன, இதில் கண்காணிப்பு கோபுரமும் உள்ளது. அவ்வப்போது இந்த சிறைச்சாலை விரிவுபடுத்தப்பட்டு வந்தது. இந்த சிறைச்சாலையின் நுழைவு வாயிலில் அருகே 1905 ஆம் ஆண்டு தரைத்தளம் மற்றும் முதல் தளங்கள் என தலா 10 அறைகள் கொண்ட சிறைச்சாலைகளும் கட்டப்பட்டன. அதன் நேர் எதிரே தலா 5 அறைகள் கொண்ட கட்டிடங்களும் கட்டப்பட்டன. சிறைச்சாலையை சுற்றிலும் 20 அடி உயரமும் இரண்டு அடி அகலத்திலும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது.

செங்கல் மற்றும் கருங்கல்லில் கட்டப்பட்ட சிறைச்சாலையில் ஒவ்வொரு அறையும் 8 அடி அகலமும் 15 அடி நீளமும் கொண்டுள்ளது. அறையின் முகப்பில் 2 அடி அகலம், 7 அடி உயரத்தில் உள்ளே செல்ல இரும்பு கம்பிகளுடன் கூடிய கதவுகள், பின்புறத்தில் ஜன்னல் மற்றும் அதே அறையில் கழிவறை வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் தஞ்சாவூர் பகுதியில் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் இச் சிறைச்சாலையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டனர்.

இவர்களில் உயிரிழந்தவர்களும் ஏராளம், உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் போலீசார் கைது செய்து இந்த சிறைச்சாலையில் தான் அடைத்தனர். மூதறிஞர் ராஜாஜி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்ட போது வேதாரண்யத்திற்கு செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு இச்சிறையில் தான் அடைக்கப்பட்டார். அதனால் அவரது நினைவாக இவ்வளாகத்தில் ராஜாஜி அரசு நடுநிலைப்பள்ளி இப்போதும் செயல்பட்டு வருகிறது.

ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த சிறைச்சாலை நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பாஸ்டல் பள்ளியாகவும், அதன் பின்னர் சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியாகவும் மாற்றப்பட்டது, தற்போது சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்லம் என்ற பெயரில் இயங்கி வருகிறது.

இதில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு தண்டனை பெறும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் அடைக்கப்படுகின்றனர். இதில் பயன்படுத்தப்படாத சிறைச்சாலையில் உள்ள அறைகள் அனைத்தும் புதர்கள் அடர்ந்து சிதிலமடைந்தும் காணப்பட்டு வருகின்றன. தற்போது 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடிய நிலையில் இந்தப் பழமையான சிறைச்சாலையை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும்.138 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள சிறைச்சாலையை சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை போற்றும் வகையிலும், அவர்களை வருங்கால தலைமுறையினருக்கு நினைவுபடுத்தும் விதமாகவும் புதுப்பித்து பாதுகாக்க வேண்டும் என்பதே சமூக வரலாற்று ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Exit mobile version