கியாஸ் கசிவால் ஏற்பட்ட பயங்கரம்! அடுத்தடுத்து ஏற்பட்ட விபரீதம்!
சென்னையில் குரோம்பேட்டையின் அருகில் அஸ்தினாபுரம் பகுதியில், நேதாஜி நகர், ஏரிக்கரை பகுதியை சேர்ந்த சரவணன்(53) வயதும், இவர் மனைவி ஜெயக்கொடி(44) வயது இருவரும் கட்டிட வேலை செய்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் அதே பகுதியில் குடிசை வீட்டில் வாழ்கின்றனர்.நேற்று முன்தினம் இரவு சமைப்பதற்காக ஜெயக்கொடி ஏற்பாடுகளை செய்யும் போது, கியாஸ் சிலிண்டரை திறந்து விட்டு சிறிது நேரம் கழித்து அடுப்பை பற்ற வைத்து இருப்பார் எனவும், இதனால் கண்களுக்கு தெரியாத கியாஸ் வாயு, வீடு முழுவதிலும் பரவி இருந்த காரணத்தினால் வீடு குப்பென்று தீ பிடித்து விட்டது.
ஆனாலும், ஜெயக்கொடி அதிர்ஷ்ட வசமாக வெளியில் ஓடி வந்து விட்டார்.பின் சிறிது நேரத்தில் அந்த சிலிண்டர் வெடித்து சிதறியது.இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தாம்பரத்திலுள்ள தீ அணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு, அவர்களே தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தனர்.
மேலும் வீட்டிலிருந்த ஒரு சிலிண்டரை பத்திரமாக வெளியே எடுத்து வைத்து விட்டதாகவும் தெரிவித்தனர்.அதற்குள் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சி எடுத்துள்ளனர்.
அதற்குள்ளாகவே வீட்டில் இருந்த மூன்றாவது சிலிண்டர் வெடித்து விட்டது.பின்னர் சிறிது நேரம் போராடி தீயை அணைத்தனர்.ஆனாலும் குடிசை முற்றிலும் எரிந்து சாம்பல் ஆனது.
அடுத்தடுத்து அதே இடத்தில் இரண்டு சிலிண்டர்கள் வெடித்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த தீ விபத்தில் அந்த பகுதியை சேர்ந்த வெங்கடேசன்(26) என்பவர் படுகாயம் அடைந்தார்.
மேலும் அதே பகுதியை சேர்ந்த செல்வகுமார்(30) மற்றும் தீ அணைப்பு வீரரான ரவிக்குமார்(30) ஆகியோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.அதன் பின் காயமடைந்த 3 பேரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.குடிசை வீட்டில் மூன்று சிலிண்டர்கள் இருந்தது தொடர்பாக சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நேற்று காலை சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட பல்லாவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.இ.கருணாநிதி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரண பொருட்கள் மற்றும் ரூ.5000 நிதிஉதவி வழங்கினார்.