மயானத்தை ஆக்கிரமித்த நபருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் வெள்ளாளபாளையம் அம்பேத்கர் நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. அந்த பகுதியில் இருக்கும் இடுகாட்டை ஒரு தனிநபர் ஆக்கிரமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், சென்ற மாதம் முப்பதாம் தேதி அக்கிராமத்தில் உயிரிழந்த ஒரு நபரின் உடலை எடுத்துச் சென்றபோது, பாதையில் வேலி அமைத்து தடுத்ததால் அந்த நபரை அடக்கம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. ஊர்மக்களின் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அதிகாரிகள் அந்த ஆக்கிரமிப்பை அகற்றி உடலை எடுத்துச் செல்ல உதவினர்.
இந்தநிலையில் அந்நபர் மறுபடியும் சுடுகாட்டை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தெரிவித்து அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்றுள்ளனர். கூட்டமாக செல்ல காவல்துறையினர் அனுமதி வழங்காததை அடுத்து மனு கொடுக்க சென்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.