குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்..தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்த கிராம மக்கள்..!!
புதுக்கோட்டை மாவட்டம் அருகே வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் கடந்த 2022ஆம் ஆண்டு மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அந்த சமயத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் இந்த சம்பவத்திற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்ததோடு, குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார்கள்.
ஆனால் இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் இன்னும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இப்போது வரை இந்த வழக்கில் எந்தவொரு முன்னெற்றமும் இல்லை. எனவே நடைபெறவுள்ள தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அக்கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முடிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் முதல்கட்டமாக குடிநீரில் கலக்கப்பட்ட மனித கழிவில் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவும், சந்தேகத்தின் பேரில் 30 பேரிடம் இருந்த எடுக்கப்பட்ட டிஎன்ஏவும் ஒத்துப்போகவில்லை. எனவே அடுத்த கட்டமாக குரல் மாதிரி சோதனை நடத்தியுள்ளனர். இதுவரை 2 பேரிடம் சோதனை நடைபெற்ற நிலையில், இன்னும் 3 பேரிடம் நடத்துவதற்கான பணி நடைபெற்று வருகிறது.
ஆனால் இதுவரை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவை கலந்த மர்ம நபர்கள் குறித்து எந்தவொரு சிறிய தகவலும் தெரியவில்லை. இதனால் வேங்கைவயல் மற்றும் இறையூர் கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கூறி ஆங்காங்கே பேனர் மற்றும் பிளக்ஸ் அடித்து வைத்துள்ளனர். இதனால் வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.