சட்டசபையில் எதிரொலித்த குரூப் 4 விவகாரம்! இன்று நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
குரூப் 4 தேர்வு முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் நிலையில் இன்று கூடும் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் சென்ற வாரம் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட இந்த தேர்வு முடிவுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்யவில்லை மற்றும் தேர்வு எழுதிய பல லட்சம் பேருக்கு தேர்வு முடிவுகள் வெளியிடவில்லை என்பன போன்ற புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தரப்பில் கூறுகையில் தமிழ் தேர்வில் தோல்வி காரணமாக 5 லட்சம் பேருக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட சில மையங்களில் அதிக தேர்ச்சி பெற்றிருப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த விவகாரம் சட்டசபை வரை எதிரொலித்துள்ளது.
இந்த விவகாரம் சட்டசபை வரை எதிரொலித்ததோடு மட்டுமில்லாமல் பல்வேறு புகார்கள் இணைந்த நிலையில் இது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்க ஆலோசனை கூட்டம் ஒன்றினை நடத்த டிஎன்பிஎஸ்சி முடிவு செய்தது.
இதையடுத்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முக்கிய அவசர ஆலோசனை கூட்டம் இன்று புதன்கிழமை 29/3/2023 நடைபெற உள்ளது. சென்னை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் தற்காலிக தலைவரை கொண்டு தொடங்கும் இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் மற்றும் முக்கிய அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிய வந்துள்ளது. மேலும் கூட்டம் முடிவுற்றதும் புகார்கள் மற்றும் தேர்வு முடிவுகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என தெரிகிறது.