Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்! சிபிசிஐடிக்கு மாற்றம்

#image_title

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம். சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்ததாக ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த காவலர்கள் அனைவரும் கூண்டோடு பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இந்த மனித உரிமை மீறல் தொடர்பாக மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து பாதிக்கப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கையை தயார் செய்து வருகின்றனர். மேலும் பல்பிடுங்கிய விவகாரம் தொடர்பாக ஐஏஎஸ் அமுதா தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட ஏஎஸ்பி பல்பீர் சிங் மீது கொலை மிரட்டல், ஆயுதங்களை கொண்டு சித்திரவதை செய்தல், கொடுங்காயம் ஏற்படுத்துதல், உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் திருநெல்வேலி குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் ஐ.ஏ.எஸ் அமுதாவின் இடைக்கால அறிக்கை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த அறிக்கையில் இந்த வழக்கை சிபி.சி.ஐடிக்கு மாற்றுமாறு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், ஏ.எஸ்.பி பல்பீர் சிங் மீதான பல் பிடுங்கிய வழக்கு உட்பட அதனை சார்ந்த அனைத்து வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். அடுத்த கட்டமாக பல்வீர் சிங்கை நேரில் அழைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

Exit mobile version