திடீரென கீழே இறங்கிய லிப்ட் !! மூடப்படாத கதவினால் துப்புரவு தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்!!
சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் லிப்டின் இடையில் சிக்கி தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையில் உள்ள பெரம்பூர் குக்கீஸ் சாலை, ஹதர்கார்டன் மெயின் தெருவை சேர்ந்தவர் அபிஷேக் (வயது 28). இவர், மயிலாப்பூர் டாக்டர்ராதாக்ருஷ்ணன் சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல மதியம் பொருட்களை எடுத்துக் கொண்டு, பணியாளர்களுக்காக அமைக்கப்பட்ட லிப்டில் டிராலி மூலம் பொருட்களை எடுத்துக் கொண்டு 11-வது மாடிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் வந்த லிப்டின் கதவுகள் சரியாக மூடப்படாமல் இருந்துள்ளது.
அப்போது 9-வது மாடிக்கு செல்லுகையில் திடீரென மேலே சென்ற லிப்ட் கீழ்நோக்கி வரத்தொடங்கியுள்ளது. இதனால் அபிசேக் நிலைத்தடுமாறி லிப்டுக்கும் வெளியில் உள்ள கதவிற்கும் இடையே விழுந்துள்ளார். சரியாக அந்த சமயத்தில் லிப்ட் வேகமாக கீழே இறங்கவும் லிப்ட்க்கு இடையில் அபிஷேக்கின் கால் மாட்டிக் கொண்டதில் அதே இடத்தில உடல் துண்டாகி பரிதாபமாக இறந்தார்.
அவரது உடலானது லிப்டின் இடையில் இழுக்கப்பட்டு மாட்டிக்கொண்டது. இதைக்கண்டு மற்ற ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனடியாக விரைந்து வந்த மயிலாப்பூர், மற்றும் எழும்பூர், தீயணைப்பு படை வீரர்கள் லிப்டை உடைத்து சுமார் 2 மணிநேரத்திற்கு மேல் போராடி அபிசேக் உடலை மீட்டனர்.
அதன் பின்னர் ராயபேட்டை போலீசார் பலியான அபிசேக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை செய்து வருகின்றனர்.