திருப்பூர் மாவட்டம், அழகுமலை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடைவிதிக்க கோரிய வழக்கில், மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அழகுமலையை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் பணம் பறிக்கும் நோக்கத்தில் ஜல்லிகட்டு நடத்துவதாக கூறி, அழகுமலை கிராம பஞ்சாயத்து தலைவர் தூயமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக மதுரையில் இருந்து மாடுகளும், சிவகங்கையில் இருந்து மாடுபிடி வீரர்களும், தினக்கூலிக்கு அழைத்து வரப்படுவதாகவும், ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கிராம பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆட்சியருக்கு கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அமைச்சர் சுவாமிநாதன் ஏப்ரல் 24ம் தேதி அழகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என தன்னிச்சையாக அறிவித்துள்ளதாகவும், உரிய அனுமதி இல்லாமல் நடத்தப்பட உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் வேலுமணி மற்றும் லட்சுமி நாராயணன் அமர்வு, ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கப்பட்டது என பதிலளிக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.