மீண்டும் மாறிய ‘மைக்’ சின்னம்!! சீமானுக்கு புதிய பிரச்சனை!!
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில்,நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த ஒலிவாங்கி சின்னம் மூலம் மீண்டும் ஒரு பிரச்சினை உருவெடுத்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் நிலையில்,அக்கட்சிக்கு ஒலிவாங்கி சின்னத்தை ஒதுக்கியிருந்தது தேர்தல் ஆணையம்.கரும்பு விவசாயி சின்னத்தை அவர்கள் கேட்டிருந்த நிலையில்,அதை ஒதுக்காததால் தேர்தல் ஆணையத்தையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்திருந்தார் சீமான்.
தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக செயல்படுவதாக குற்றம்சாட்டிய சீமான், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையையும் வசைபாடினார். இதற்கு பதிலளித்த அண்ணாமலை,”அண்ணன் சீமான் எப்போதும் காமெடி செய்து கொண்டிருப்பார். அவரை எல்லாம் நாங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை” என்றார்.
இந்தநிலையில்,தேர்தல் ஆணையம் ஒதுக்கிய ஒலிவாங்கி சின்னத்திலேயே பிரச்சனை ஏற்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.அதாவது நாம் தமிழர் கட்சியின் ஒலிவாங்கி சின்னம் வேறுவடிவத்தில் வாக்கு இயந்திரங்களில் ஒட்டப்படுவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அவர்கள் புகார் அளித்துள்ளனர்.தேர்தல் ஆணையம் ஒதுக்கிய அந்த சின்னத்தில் ஆன்,ஆஃப் ஸ்விட்ச் இல்லாத ஒலிவாங்கி சின்னமாக இருந்தது.
ஆனால்,வாக்கு இயந்திரங்களில் ஆன், ஆஃப் ஸ்விட்ச் உடன் ஒலிவாங்கி சின்னம் இருப்பதாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர்.இம்மாதிரி வடிவம் மாறியிருந்தால்,வாக்காளர்கள் குழப்பம் அடைவார்கள் என்று நாம் தமிழர் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் சீமானுக்கு சின்னம் கிடைப்பதில் பிரச்சனை இருந்தது.தற்போது சின்னத்திலேயே பிரச்சனை எழுந்துள்ளது.
புதிய சின்னம் என்றாலும்,மக்களிடம் ஓரளவுக்கு அது பதுவாகியிருந்த நிலையில்,இந்த பிரச்சனையால் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மீண்டும் தொய்வு ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.