பிளாஸ்டிக் கப்புகளை விற்பனை செய்த மதுபான கடைகளுக்கு அபராதம்!!
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகளை விற்பனை செய்த டாஸ்மாக் மதுபான கடை பாருக்கு ரூபாய் 20 ஆயிரம் அபராதம் விதித்த நகராட்சிதுறையினர்.
மயிலாடுதுறை தற்காலிக பேருந்து நிலைய பகுதிகளில் இன்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தூய்மை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் ஆய்வு செய்தபோது டாஸ்மாக் கடை அருகில் அதிக அளவில் குப்பைகள் தேங்கி கிடந்ததோடு அதில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள் அதிக அளவில் கிடந்தது.
உடனடியாக நகராட்சி ஆணையர் செல்வபாலாஜியிடம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பிச்சைமுத்து, ராமையன் மற்றும் அலுவலர்கள் டாஸ்மாக் கடையை ஒட்டி இயங்கும் மதுபான கூட்டத்தில்(பார்) திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அங்கு விற்பனைக்காக இருந்த தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகளை பறிமுதல் செய்து மதுபான கூட்டத்திற்கு ரூபாய் 20 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
மயிலாடுதுறை நகரில் அதிக அளவில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதை கண்டுகொள்ளாமல் பெயரளவில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படும் நிலையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவால் டாஸ்மாக் மதுபான கூடத்திற்கு நகராட்சி துறையினர் .அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.