அடுத்த அதிர்ச்சி அந்தமானில் ஏற்பட்ட நிலநடுக்கம்! பீதியில் உறைந்த மக்கள்!
இந்தியாவின் அருகில் உள்ள தீவுக்கூட்டமான அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் பிப்ரவரி ஆறாம் தேதி அதிகாலையில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் அதிகாலையில் ஏற்பட்டதால் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். பல லட்சம் மக்கள் காயம் அடைந்து தங்கள் வீடு வாசல்களை பறிகொடுத்தனர்.
இதேபோல் அடுத்து இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளிலும் அடுத்தடுத்து மிதமான மற்றும் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. அடுத்து எந்த நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படுமோ? என்ற அச்சத்திலேயே மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக் கூட்டமான அந்தமான் நிக்கோபர் மற்றும் குஜராத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டன. ரிக்டர் அளவில் 5.0வாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
தேசிய புவி இயற்பியல் ஆய்வுக் கழகத்தின் தலைமை விஞ்ஞானி என்.பூர்ண சந்திர ராவ் கூறியுள்ள எச்சரிக்கை பதிவில் கண்டத் தட்டுகளின் நகர்வினால் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்திய கண்டத் தட்டு அல்லது டெக்கானிக் பிளேட் ஆனது ஆண்டுக்கு 5 செ.மீ. நகர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தியாவில் மிகப் பெரிய நிலநடுக்கத்துக்கான சாத்தியங்களை இந்த நகர்வு அதிகப்படுத்தி இருக்கிறது.
இமயமலையில் நேபாளத்தின் வடக்கு மற்றும் இந்தியாவின் இமாச்சல பிரதேச மாநிலம் இடையே பெரும் இடைவெளி உருவாகி கொண்டிருக்கிறது. இதனால் உத்தரகாண்டில் மிக மோசமான நிலநடுக்கம் ஏற்படுத்தும் என்று கூறியிருந்தார். அதேபோல் உத்தரகாண்டில் உள்ள உத்திர காசியில் தொடர்நிலநடுக்கங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.
இதன் தொடர்ச்சியாக அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 5:07 மணி அளவில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் குஜராத் மாநிலத்தில் அரபிக் கடலை ஒட்டி உள்ள புனித நகரமான துவாரகாவும் நிலநடுக்கத்தால் இன்று குலுங்கியது. அங்க 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது.
இந்த தகவலை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.