விஜய் மக்கள் இயக்கமாக இருந்ததை தமிழக வெற்றிக்கழகமாக நடிகர் விஜய் அவர்கள் மாற்றியுள்ளார். மேலும் முறையாக அரசியல் கட்சியாக இதனை பதிவு செய்து இக்கட்சிக்கான பெயர் மற்றும் கொடி அறிமுகம் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில அளவிலான மாநாடு கடந்த 27ஆம் தேதி விக்ரவாண்டியில் உள்ள வி.சாலையில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வர சிறப்பாக நடைபெற்ற முடிந்தது. இதில் கட்சியினுடைய கொள்கைகள் மக்கள் மத்தியில் பறைசாற்றப்பட்டது.
இதனை மற்ற கட்சிகள் எதிர்த்தும் விமர்சித்தும் பலவிதமாக தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர். மேலும் சீமான், திருமாவளவன் உள்ளிட்டோரும் இக்கழகத் தலைவரின் கொள்கை தவறானது என்று கூறிவந்தனர்.
இதற்கு எவ்வித பதிலும் கூறாமல் இருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சித் தலைவர் விஜய் அவர்கள், இன்று சென்னை பனையூரில் கட்சி செயலாளர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்.
மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் என 138 பேர் கலந்து கொண்டுள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.இக்கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை, பொறுப்பாளர் நியமனம் உள்ளிட்டவை குறித்தும், கட்சி பொதுக்கூட்டங்கள் நடத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.