ப.சிதம்பரத்தை அடுத்து குறிவைக்கப்படும் திமுக பிரமுகர்
பாஜகவின் பெரும் தலைவலியாக இருப்பது திமுக மட்டுமே என்ற ஒரு கருத்து பாஜகவின் மேலிடத்தில் இருந்து வருவது தெரிந்ததே. குறிப்பாக தமிழகத்திற்கு பிரதமர் மோடி வரும் போது ’கோபேக் மோடி’ என்று கோஷம் போடுவது, பாஜகவை கடும் அதிருப்தி அடைய செய்துள்ளது
இந்த நிலையில் காங்கிரஸ் பிரமுகர் ப சிதம்பரம் அவர்கள் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து திமுகவுக்கு அமித்ஷா-மோடி கூட்டணியினர் குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்வது போல் சமீபத்தில் பேட்டியளித்த ஒரு பாஜக பிரமுகர் ’தமிழகத்தில் இரண்டு பிரமுகர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று ஏற்கனவே சொல்லப்பட்டது. அதில் ஒருவர் கைது செய்யப்பட்டுவிட்டார், இன்னொருவர் மிக விரைவில் கைது செய்யப்படுவார் என்று கூறியுள்ளார்
இதனை அடுத்து அந்த இன்னொரு பிரமுகர் அனேகமாக திமுக பிரமுகராகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் சம்பந்தப்பட்ட 2ஜி வழக்கு மீண்டும் தூசி தட்டப்பட்டு உள்ளதாகவும் அதேபோல் திமுக பிரமுகர் சாதிக் பாட்சா கொலை வழக்கும் தூசு தட்டப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது
அமித்ஷா – மோடியின் பார்வை தற்போது திமுக பக்கம் திரும்பியுள்ளதாகவும், வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் திமுக இமேஜை உடைத்து காலி செய்தால்தான் தங்கள் கூட்டணி ஆட்சி அமைக்க முடியும் என்பதால் அடுத்த குறி திமுகவுக்குத்தான் என்றும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன
பாஜகவின் இந்த அதிரடியை எதிர்கொள்ள திமுகவும் தயாராக இருப்பதாகவும், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் தங்களுக்கு சாதகமாக இருப்பதால் பாஜக அதிரடி காட்டினால் பதிலடி கொடுக்க ஊடகங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்ற முடிவில் திமுக இருப்பதாகவும் கூறப்படுகிறது.