விடாமல் துரத்தும் ஆன்லைன் ரம்மி மோகம்! பணத்தை இழந்த இராணுவ வீரர் தற்கொலை!!
ஆன்லைன் ரம்மி மீது கொண்ட ஆசையால் பணத்தை இழந்த இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கீழக்கரந்தை பகுதியில் வேலுப்பிள்ளை என்பவர் மகன் 28 வயதான மணித்துரை என்பவர் 2018ம் ஆண்டு முதல் இராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
இராணுவ வீரர் மணித்துரை அவர்களுக்கும் உதயசுருதி என்ற பெண்ணுக்கும் சுமார் ஒன்றரை வருடத்திற்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இருந்த மணித்துரை கடந்த 1ம் தேதி அதிகாலை திடீரென்று தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு உறவினர்கள் மற்றும் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்பட்டது.
தற்கொலை செய்வதற்கு முன்பு 1ம் தேதி அதிகாலையில் மணித்துரை தன் தாய் கனக வேலம்மாள் அவர்களுடன் செல்போனில் பேசியுள்ளார்.
தாயுடன் பேசிய போது மணித்துரை அவர்களிடம் தான் ஆன்லைன் ரம்மி விளையாடியதாகவும் அதன்ல் பணத்தை இழந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இதனால் கடன் ஏற்பட்டு விட்டதால் தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கூறி போனை வைத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும் போனில் தாயுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே துப்பாக்கியால் தன்னை.சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. தற்கொலை செய்து கொண்ட இராணவ வீரர்மணித்துரை அவர்களின் தந்தை வேலைப்பிள்ளை 5 மாதங்களுக்கு முன்னர் விபத்தில் இறந்தது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் ரம்மியால் இதற்கு முன்னர் பலர் இறந்துள்ளனர். தற்பொழுது ஆன்லைன் ரம்மியால் இராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஊர் மக்களின் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பணங்களை இழக்கச் செய்து பல பேரின் உயிர்களை வாங்கும் இந்த ஆன்லைன் ரம்மியை தமிழக அரசு எப்படியாவது தடை செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.