மாநகரப் போக்குவரத்து கழகம் வெளியிட்ட உத்தரவு! எந்த தடையின்றி பேருந்துகள் இயங்கும்!
சென்னையில் சாதாரண கட்டணப் பேருந்துகள் நூறு சதவீதமாக இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தற்போதைய நிலையில் தினம் தோறும் 3,232 மேற்பட்ட மாநகரப் பேருந்துகள் இயங்கி வருகிறது.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளால் மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்யக்கூடிய பயணிகள் எண்ணிக்கை குறைவாக காணப்பட்ட நிலையில், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இத்தகைய சூழலில் பெரும்பாலான பணிமனைகளில் பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்கப்படுவதில்லை எனவும் , பல பேருந்துகள் இயக்கம் குறைக்கப்பட்டு இருப்பதாகவும் தொடர்ந்து பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது.
தற்போது அரசின் கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்பட்ட நிலையில் போக்குவரத்து தேவையும் அதிகரித்துள்ளது. எனவே, தேவையின்றி பணிக்கு வராமல் இருப்பதை தவிர்க்கவும், பேருந்துகளை குறித்த நேரத்தில் இயக்கவும், சாதாரண பேருந்துகளின் நூறு சதவீத இயக்கத்தை உறுதிப்படுத்தவும், கடைசி பேருந்துகள் மற்றும் இரவு பேருந்துகளை இன்றி சரியாக இயக்கவும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் அனைத்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.