வாரத்தில் ஒரு நாள் புலிகளை பட்டினி போடும் பூங்கா ஊழியர்கள்.. எதற்காக தெரியுமா..??
காட்டு விலங்கான புலிகள் மாமிசத்தை தவிர வேறு எதையும் உணவாக எடுத்துக் கொள்ளாது.ஒரு நாளைக்கு கிலோ கணக்கில் மாமிசங்களை உணவாக உட்கொள்ளும் இந்த புலிகளை நேபாளத்தில் உள்ள மத்திய உயிரியல் பூங்கா ஊழியர்கள் வாரத்தில் ஒரு நாள் வேண்டுமென்றே பட்டினி போட்டு வருகிறார்களாம்.
அதன் பின்னணியில் ஒரு சுவாரஸ்ய தகவல் உள்ளது.அதாவது இந்த பூங்காவில் உள்ள பெண் புலிகளுக்கு நாள் ஒன்றுக்கு 5 கிலோ எருமை மாட்டு இறைச்சியும்,ஆண் புலிகளுக்கு 6 கிலோ எருமை மாட்டு இறைச்சியும் உணவாக வழங்கி வருகிறார்களாம். ஆனால் வாரத்தில் சனிக்கிழமை மட்டும் இந்த புலிகளுக்கு ஒரு துண்டு மாமிசத்தை கூட கொடுக்க மாட்டார்களாம்.
அதற்கு காரணம் புலிகளின் ஆரோக்கியம் என்று கூறுகிறார்கள். அதாவது புலிகள் தினமும் நிறைய உணவு சாப்பிட்டு வந்தால், அதன் வயிற்றின் கீழ்ப்பகுதியில் கொழுப்புகள் அதிகரிக்குமாம். அதன் காரணமாக புலிகள் சிறிது தூரம் ஓடினாலே களைப்பாகி விடுமாம். அதுமட்டுமல்ல உடல் எடையும் அதிகரித்து விடுமாம்.
இது நிச்சயம் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். எனவே இதுபோன்று வாரத்தில் ஒரு நாள் உணவு வழங்காமல் இருந்தால் அதன் செரிமான அமைப்பு பலமாக இருக்குமாம். அதன் காரணமாக தான் வாரத்தில் ஒரு நாள் மட்டும் புலிகளுக்கு உணவு வழங்காமல் பட்டினி போடுவதாக அந்த பூங்காவின் தகவல் அதிகாரி கூறியுள்ளார்.காடுகளில் சுதந்திரமாக சுற்றித்திரியும் புலிகளுக்கு இது தேவையில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் அடைப்பட்டு கிடக்கும் புலிகளுக்கு தான் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.