Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தீர்த்தவாரி நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்த மூவரசம்பட்டு குளத்தில் தடுப்பு வேலி அமைத்து பூட்டு!

#image_title

தீர்த்தவாரி நிகழ்ச்சியில் 5 பேர் பலியான மூவரசம்பட்டு குளத்தில் தடுப்பு அமைத்து பூட்டு!!

சென்னையை அடுத்த நங்கநல்லூர் எம்.எம். டி.சி. காலனியில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கடந்த 5 ந்தேதி மூவரசம்பட்டு குளத்தில் தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சி நடந்தது.

இதில் ராகவ்(19), வனேஷ்(19), ராகவன்(22). சூர்யா(22), யோகேஸ்வரன்(23) ஆகிய 5 பேர் குளத்தில் மூழ்கி பலியானார்கள். இந்த சம்பவம் நங்கநல்லூர், பழவந்தாங்கல், முவரசம்பட்டு பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் முவரசம்பட்டு குளத்தை ஆழ்மான பகுதி என்பதால் பொது மக்கள் யாரும் செல்லகூடாது என முவரசம்பட்டு ஊராட்சி மன்றம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. மேலும் குளத்தில் யாரும் இறங்கிவிட கூடாது என்பதற்கு சுற்றியுள்ள தடுப்பு கேட்டுகள் அமைக்கப்பட்டு பூட்டு போடப்பட்டது.

இந்த நிலையில் மூவரசம்பட்டு குளக்கரையை சுற்றி அமைக்கப்பட்ட நடைபாதையில் கடந்த ஒருவருடமாக அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை காலையும் மாலையும் நடைப்பயிற்சி செய்வது வழக்கமாக இருந்தது.

குளம் பூட்டப்பட்ட சம்பவம் நடைபயிற்சியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் ஊர் குளத்தில் 5 பேர் முழ்கி உயிரிழந்த சம்பவத்தால் ஆவிகள் குளத்தை சுற்றிவரக்கூடும் என்ற நம்பிக்கையில் ஊர்மக்கள் சிலர் ரகசியமாக எலுமிச்சை, குங்குமம், வெற்றிலை போன்ற பொருட்களை வைத்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்துள்ளனர்.

இந்த நிலையில் குளத்தை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து முடித்த பின்னர் குளத்தின் பிரதான கேட் திறக்கப்படும் என கூறப்படுகிறது. இதை உறுதி செய்யும் வகையில் குளக்கரையில் படித்துறையை முற்றிலும் மூடி ஸ்டீல் கேட் அமைக்கப்பட்டது. இந்த பணியை ஊராட்சி மன்ற தலைவர் ஜி.கே.ரவி தலைமையில் ஊராட்சி நிர்வாகத்தினர் செய்தனர்.

Exit mobile version