Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இன்னும் 2 ஆண்டுகளில் இது நடந்தே தீரும்! மத்திய அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்!

தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள் ஒரு முறையும் பொழுதொரு வண்ணமுமாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது.இதனை மத்திய அரசு நினைத்தாலும் கூட கட்டுப்படுத்த முடியாது என்று மத்திய அரசு தன் தரப்பு விளக்கங்களை தெரிவித்து வருகிறது. ஏனென்றால் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் மேலை நாடுகளில் இந்த பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடு குறைவாகத்தான் இருக்கிறது காரணம் அங்கே மின்சார உதவியுடன் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சொல்லப்போனால் மேலைநாடுகளில் பேருந்துகளில் கூட பெட்ரோல் மற்றும் டீசல் பயன்படுத்தப்படுவதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஆனால் இந்தியாவிலோ அப்படியே தலைகீழாக இருக்கிறது உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு துறைகளில் முன்னேறி வரக்கூடிய நேரத்தில் இந்தியாவில் மட்டும் இன்னமும் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்டவைகளை நம்பியே வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், சமீபகாலமாக மின்சார வாகனங்களின் பயன்பாடு சற்று அதிகரித்திருக்கிறது இதனை மத்திய, மாநில, அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் நாடாளுமன்ற மக்களவையில் நேற்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சக மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு அந்தத் துறையின் அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து பசுமையான ஹைட்ரஜன் எரிபொருளாக மாற்றும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டிருக்கிறது நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய மாவட்டங்களில் இந்தத் தொழில்நுட்பத்தை செயல்படுத்த வேண்டும்.

இது மலிவான மாற்று எரிபொருளாக இருக்கும் ஹைட்ரஜன் எரிபொருள் புழக்கத்துக்கு வந்து விட்டால் இன்னும் 2 வருடங்களில் பெட்ரோல் வாகனங்களின் விலைக்கு நிகராக மின்சார வாகனங்களின் விலை குறைந்துவிடும் என்றும் அதோடு அயன் பேட்டரி விலையும் குறைந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version