ஹோட்டல் உணவு பொருள்களின் விலை உயர்கிறது… என்ன அதற்கு இது தான் காரணமா..?

0
134

ஹோட்டல் உணவு பொருள்களின் விலை உயர்கிறது… என்ன அதற்கு இது தான் காரணமா..?

 

சமீப நாட்களாக தக்காளி விலை அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல் காய்கறிகளின் விலையும் அதிகரித்து வருகின்றது. இதையடுத்து பருப்பு வகைகளின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் ஹோட்டலில் விற்பனை செய்யப்படும் உணவு பொருள்களின் விலையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் தக்காளி விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் தக்காளி மட்டுமில்லாது மற்ற காய்கறிகளின் விலைகளும் அதிகரித்து வருகின்றது. மேலும் எண்ணெய், பருப்பு வகைகள், தானியங்கள் போன்ற மற்ற பொருள்களின் விலையும் அதிகரித்து வருகின்றன.

 

இந்த விலையேற்றத்தால் பாதிக்கப்படுவது மக்கள் மட்டுமில்லை. ஹோட்டல்களும் ஹோட்டல் தொழில் செய்பவர்களும் காய்கறிகளின் விலையேற்றத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஹோட்டல் உணவு பொருள்களுக்கு தேவையான அத்தியாவசிய காய்கறிகளின் விலை உயரந்து வருகின்றது. மேலும் மின்சாரக் கட்டணம் வேறு உயரந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலையேற்றம் தான் காய்கறிகளின் விலையேற்றத்துக்கு முக்ககய காரணமாக உள்ளது. மேலும் இந்த மாதம் முழுவதும் விலையேற்றத்தை ஆய்வு செய்த பின்னர் அடுத்த மாதம் முதல் ஹோட்டல் உணவு பொருள்களின் விலையை முடிவு செய்வோம் என்று சென்னை ஹோட்டல் சங்கம் அறிவித்துள்ளது.

 

இது தொடர்பாக சென்னை ஹோட்டல்  சங்க தலைவர் ரவி “தக்காளி மட்டுமில்லாமல் காய்கறிகளின் விலை உயர்ந்து வந்து கொண்டிருந்தது. தற்பொழுது அந்த பட்டியலில் மற்ற உணவு பொருள்களும் சேர்ந்துள்ளது. அதாவது தக்காளி, காய்கறிகள் மட்டுமில்லாமல் மற்ற உணவு பொருட்களான.பருப்பு வகைகள், தானியங்கள், எண்ணெய் ஆகியவற்றின் விலையும் உயர்ந்துவிட்டது. இது ஒரு மாதம் தாக்குபிடிக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையேற்றம், மின்சாரக்கட்டணம் உயர்வு போன்ற எல்லா வகையிலும் ஹோட்டல் தொழில் பாதிக்கப்பட்டு வருகின்றது.

 

ஹோட்டல்களுக்கு காலை நேரம் மற்றும் மாலை நேரம் இரண்டும் பீக்(Peak) ஹவர்ஸ் அதாவது அதிகம் வியாபாரம் நடக்கும் நேரம் என்று கணக்கிடப்பட்டு ஹோட்டல்களுக்கான மின்சாரம் இந்த மாதம் முதல் உயர்த்தப்பட்டுள்ளது. லாரி வாடகை மற்றும் டீசல் விலையேற்றமே மற்ற பொருள்களின் விலையேற்றத்துக்கான முக்கிய காரணம் ஆகும்.  இதனால் ஹோட்டல்களுக்கு அரசு விதித்திருக்கும் பீக் ஹவர்ஸ் மின்சார விதிமுறையை ரத்து செய்ய வேண்டும். அப்போதுதான் ஹோட்டல் தொழில் செய்ய முடியும்.

 

இந்த மாதம் இறுதி வரை காய்கறிகள், மற்ற மளிகை பொருள்களின் விலை உயர்கிறதா அல்லது குறைகிறதா இல்லை சமநிலையில் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்த பின்னர் தான் அடுத்த மாதம் ஹோட்டல் உணவுப் பண்டங்களின் விலையை உயர்த்த முடிவு செய்வோம். தமிழ் நாட்டில் அதிகம் விற்பனையாகும் சாப்பாடு,பொங்கல், பூரி, சப்பாத்தி, இட்லி ஆகிய உணவு பொருள்களின் விலையை உயர்த்தினால் வியாபாரம் பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்படும் என்பது தெரியும். ஆனால் காய்கறிகளின் தொடர் விலையேற்றத்தால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட முடியாது” என்று கூறினார்.