திமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியதுதான் கடன் அதிகரிக்க காரணம்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!
தமிழக அரசின் நிதிநிலை குறித்து மக்கள் அறியும் வகையில் இன்று வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனை நிதித்துறை அமைச்சரான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கடன் வாங்கி கட்டாய செலவு செய்யும் வகையில் மாநிலத்தில் நிதி நிலைமை மிகவும் சரிந்து விட்டதாகவும், கொரோனா நோய் தொற்று ஆரம்பிக்கும் காலத்திற்கு முன்பாகவே வருமானம் சரிந்து விட்டது என்றும் கூறியுள்ளார்.
வருவாய் பற்றாக்குறை இப்படி இருப்பதன் காரணமாக நிதிப்பற்றாக்குறை கட்டாயம் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். தமிழகத்தின் நிதி பற்றாக்குறை ரூபாய் 92 ஆயிரத்து 305 கோடியாக இருக்கும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் கடனைச் செலுத்தும் தன்மை குறைந்ததால் வட்டி விகிதமும் அதிகரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் அவர் சொத்துவரி, மற்றும் போக்குவரத்து வரியை அதிமுக உயர்த்தவில்லை? பாவம் யாரிடம் வரியை வாங்குவது என்று கூட அதிமுக அரசுக்கு தெரியவில்லை.
தமிழகத்தில் புள்ளிவிவரங்களின்படி 2 கோடியே 16 லட்சத்து 24,238 குடும்பங்கள் எனக் கொண்டால் ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் தற்போது 2.63 லட்சம் கடன் உள்ளது. என்றுதான் நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். மேலும் அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் வருமானம் மட்டுமே அதிகரித்துள்ளது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.
மேலும் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இரண்டு மாதங்கள் தேர்தல் பணியிலேயே காலம் போய்விட்டது. மற்ற வெள்ளை அறிக்கைகளை விட கூடுதல் விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. முந்தைய ஆட்சியில் பெறப்பட்ட கடனால் ஏற்பட்ட சிக்கல்களை இதில் விளக்கியுள்ளேன். தற்போது இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் தமிழ்நாடு சந்தித்ததை போன்ற பொருளாதார சரிவை சந்திக்க வில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் வெள்ளை அறிக்கை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, வெள்ளை அறிக்கையில் புதிய விஷயங்கள் எதுவும் குறிப்பிடவில்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதில் வெள்ளை அறிக்கை வெளியிட்டு மக்களின் கவனத்தை முழுவதுமாக திமுக திசை திருப்புகிறது என்று திமுக மீது அவரும் குற்றம் சாட்டினார்.
கடந்த திமுக ஆட்சியில் வைக்கப்பட்ட கடனுக்கு அதிமுக ஆட்சியில் வட்டி கட்டினோம் என்றும் சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் முன்கூட்டியே ஏன் வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார். அதிமுக பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை என்பதால் தற்போது திமுக அரசு உயர்த்தப் போகிறதா? என்றும் அவர் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். மேலும் மக்களை வரி விதிப்புக்கு தயார் படுவதாக வெள்ளை அறிக்கை உள்ளது என்றும் அவர் மக்களுக்கு கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளார்.