இயக்குனர் பேரரசு விடுத்த கோரிக்கை – கண்டனம் தெரிவிக்கும் விஜய் ரசிகர்கள்!
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அவரின் அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதனை தொடர்ந்து இப்போது கோட் படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்ததாக ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு சினிமாவில் இருந்து மொத்தமாக விலகி முழுநேரமாக அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடப்போவதில்லை என்றும் 2026ஆம் ஆண்டு தேர்தல் தான் தங்களின் இலக்கு என்றும் விஜய் மிகவும் திட்டவட்டமாக கூறிவிட்டார். அதன்படி அதற்கான பணிகளையும் தனது தொண்டர்கள் மூலம் கவனித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல இயக்குனர் பேரரசு செய்துள்ள பதிவு ஒன்றிற்கு விஜய் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அதன்படி பேரரசு கூறியிருப்பதாவது, “விஜய் சார் நீங்கள் இந்த தேர்தலில் போட்டியிவில்லை என்றாலும், வாக்களிப்பது ஜனநாயக கடமை. எனவே உங்கள் ரசிகர்களை உங்களுக்கு நம்பிகையான கட்சிக்கு வாக்களிக்க சொல்லுங்கள்.
அப்படி இல்லை என்றால் ஓட்டுக்கு பணம் வாங்காமல் அவர்கள் விரும்பிய கட்சிக்கு வாக்களிக்க சொல்லி அறிக்கை ஒன்றை வெளியிடுங்கள்” என்று அவரது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதனை கண்ட விஜய் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
ஏனெனில் விஜய் ஒரு நடிகர் மட்டுமல்ல அவரும் தற்போது ஒரு அரசியல் கட்சி தலைவர். அப்படி இருக்கும்போது அவரே எப்படி வேறு ஒரு கட்சிக்கு ஓட்டுப்போடுங்கள் என்று அவர் ரசிகர்களிடம் கூற முடியும்? அது பின்னாளில் அவரின் கட்சிக்கு பிரச்சனையாகி விடாதா? ஓட்டுப்போடுவது அவரவர் விருப்பம். இதில் விஜய் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என கூறி வருகிறார்கள்.