கொரோனா கட்டுப்பாடுகளை முழுவதுமாக நீக்கி உத்தரவு பிறப்பித்த மாநில அரசு!

0
177

கொரோனா கட்டுப்பாடுகளை முழுவதுமாக நீக்கி உத்தரவு பிறப்பித்த மாநில அரசு!

உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரசின் பாதிப்பு உலகின் பல நாடுகளில் கட்டுக்குள் வந்து அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கொரோனாவின் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.

குறுகிய காலத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் பரவிய இந்த ஒமைக்ரான் வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தியாவிலும் நுழைந்திருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின், நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இந்த ஒமைக்ரான் வைரஸ் பரவியது. இதனால் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.

ஒமைக்ரானின் வருகைக்கு பிறகு நாட்டில் மூன்றாவது அலை உருவானது. எனவே, தொற்றின் பரவலை கட்டுபடுத்த அந்தந்த மாநில அரசுகள் பல கட்டுபாடுகளை விதித்து வந்தன. குறிப்பாக, டெல்லி மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இதன் பாதிப்பு மிகவும் அதிகமாகவே இருந்தது.

இதன் காரணமாக  தலைநகர் டெல்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இரவு நேர ஊரடங்கு, கடைகள் திறக்க கட்டுப்பாடு போன்றவற்றை டெல்லி அரசு அமல்படுத்தியது. இதனை தொடர்ந்து நாட்டில் தொற்றின் பரவல் குறையத் தொடங்கியது. இதையடுத்து நாட்டில் பெரும்பாலான மாநிலங்கள் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன.

அந்த வகையில், டெல்லியிலும் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. வரும் திங்கள் கிழமை முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிகளுக்கும் நேரடி வகுப்புகள் வரும் 1ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கடைகள் மற்றும் உணவகங்கள் திறந்திருக்க விதிக்கப்பட்ட நேரக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. எனினும், மக்கள் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுகிறார்களா? என்பதை அரசு தீவிரமாக கண்காணிக்கும் என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.