பாமக கட்சியினரும், வன்னியர் சங்கத்தினரும் இணைந்து நடத்தி வரும் இட ஒதுக்கீடு போராட்டம் காரணமாக சென்னை சுற்று வட்டார பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.
வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு கேட்டு பாட்டாளி மக்கள் கட்சியினர் டிஎன்பிஎஸ்சியை முற்றுகையிடும் போராட்டத்தை டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி ஆன இன்றைய தினம் ஆரம்பித்து இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து நேற்று இரவிலிருந்து தமிழகம் முழுவதுமுள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் சென்னைக்குள் வர ஆரம்பித்தார்கள்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் காவல்துறையினர் சென்னைக்குள் அவர்களை நுழைய விடாமல் தடுத்தனர். இதனை எதிர்த்து பாமகவினர் நடத்திய போராட்டத்தால் பெருங்களத்தூர் முதல் தாம்பரம் வரை இருக்கின்ற சாலையை ஸ்தம்பித்துப் போனது. சென்னைக்கு உள்ளேயும் வெளியேயும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கின்றது.
இட ஒதுக்கீடு போராட்டத்தை நடத்தும் பாட்டாளி மக்கள் கட்சியினர் தங்களை சென்னைக்குள் செல்ல அனுமதிக்காததால் அருகே இருக்கும் ரயில் நிலையத்திற்கு சென்று அங்கு வந்த தொடர்வண்டியை மறித்து கோபத்தில் அதன் மீது கற்களை வீசி எறிந்து போராட்டம் நடத்தினார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட கார்களோடு தாம்பரத்தில் மறியலில் பாமகவினர் ஈடுபட்டார்கள், கடலூரை சாந்த துணை பொதுச்செயலாளர் முத்துகிருஷ்ணன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உடன் தாம்பரத்தில் சாலை மறியலில் அமர்ந்துவிட்டார். ஆகவே அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
இதற்கிடையே இன்று காலை 10 மணி அளவில் தாம்பரத்தில் சாலை மறியல் செய்து கொண்டு இருந்தவர்கள் கொத்துக்கொத்தாக கிளம்பி சென்னைக்கு நடந்தே சென்றால் அங்கிருந்து வேறு வாகனங்களில் சென்னை பார்க் டவுனில் அமைந்திருக்கும் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகை இடுவதற்காக கிளம்பியிருக்கிறார்கள். அதோடு பல வழிகளிலும் தடுப்புகளை மீறி ஆயிரக்கணக்கான பாட்டாளி மக்கள் கட்சியினர் சென்னைக்குள் நுழைந்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கின்றது.