அரசு வேலையில் சேரப் போகும் நபர்களின் பின்னணியை காவல்துறை சார்பாக நேரில் சென்று விசாரிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
பொதுவாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு போலீஸ் வீட்டுக்கு வந்து அவர்களின் பின்னணி குறித்து விசாரணை செய்வது வழக்கத்தில் உள்ள ஒன்று. ஆனால், இப்போது அரசு வேலையில் சேரப் போகும் நபர்களின் பின்னணியை விசாரிக்கவும் காவல்துறை சார்பில் போலீஸ் அனுப்பி வைக்கப்படும் என்று புதிதாகக் கூறப்பட்டுள்ளது.
என்னதான் தனியார் துறையில் வேலைக்கு அதிக சம்பளம் இருந்தாலும், தற்போது பலரின் கனவாக உள்ளது அரசு வேலைதான். அரசு வேலைதான் நிரந்தரமான வேலை என்று பலரின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் அரசு வேலைக்காக பல பேர் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர். சில பேர் அரசு வேலைக்காக வருடக்கணக்காக படித்துத் தேர்வில் வெற்றி பெற்றுப் பணிக்குச் செல்கின்றனர்.
அப்படி இருக்க, வெற்றி பெற்று அரசு வேலைக்குச் செல்லும் நபர்களின் விவரங்களையும், அவர்களின் பின்னணியையும் விசாரிக்க அவரவர் வீட்டிற்குப் போலீஸ் அனுப்பி வைக்கப்படும் என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது.காரணம், இப்போதைய சூழலில் பல மோசடிகள் மற்றும் ஆள்மாறாட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
அரசு வேலை என்பது அரசு சார்பில் ஒவ்வொரு துறைக்கேற்ப மக்களுக்கு சேவை செய்யும் ஒரு தளமாக இருப்பதால், இதைத் தடுக்கும் வகையில் இந்த போலீஸ் வெரிஃபிகேஷன் இருக்கும். இந்த போலீஸ் வெரிஃபிகேஷன் மூலம் சில குற்றங்களைத் தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது