12 ஆம் வகுப்பு மாணவிக்கு ஆபாச மெசெஜ் அனுப்பிய ஆசிரியர்! நடவடிக்கை எடுக்க கோரிக்கை
புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு ஆபாச மெசெஜ் அனுப்பிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக அமைப்பினர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
புதுச்சேரி மரப்பாலம் சந்திப்பில் 7th டே தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மதகடிப்பட்டை பகுதியை சேர்ந்த டோனி வளவன் என்பவர் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலங்கியல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இவர் அந்த பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் புதுச்சேரியை சேர்ந்த மாணவிக்கு கடந்த ஒன்றை மாதமாக ஆபாச படங்கள், ஆபாச குறுஞ்செய்தி, மற்றும் ஆபாச பட இணைப்புகள் அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு பெற்றோர் இல்லாததால் தான் தங்கி படித்து வந்த உறவினரிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.அதன்படி மாணவியின் உறவினர்கள் மற்றும் சகபள்ளி மாணவர்களுடன் இன்று குழந்தைகள் நல அமைப்பிடம் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கோரி மாணவியின் பெற்றோர் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முதலியார்போட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் மாணவியிடம் குழந்தை நலக்குழுவினர் விசாரணை நடத்திய பின்னர் அவர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படையில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
முதல்கட்ட விசாரணையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளியில் பணிபுரியும் டேனியல் என்ற ஆசிரியர் மாணவிக்கு ஆபாச மெசெஜ் அனுப்பி உள்ளது தெரியவந்துள்ளது.
மாணவிக்கு ஆபாச மெசெஜ் அனுப்பிய ஆசிரியர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சமூக அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன் கூறும்போது, பள்ளியில் மாணவிக்கு நடந்த பாலியல் தொந்தரவு தெரிந்தே பள்ளி முதல்வர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்காமல் மூடி மறைத்து இருந்திருக்கிறார். எனவே இன்று மாலைக்குள் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்வதோடு ஆசிரியரை காப்பாற்றும் பள்ளியின் முதல்வர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அப்படி இல்லாத பட்சத்தில் புதுச்சேரியில் உள்ள அனைத்து ஜனநாயக இயக்கங்களை ஒன்றிணைத்து இந்த பள்ளிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று அவர் எச்சரித்துள்ளார்.