Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடுத்த கொடுமை.. மைதானத்தில் பொதுவெளியில் அரங்கேறிய பயங்கரம்! தாலிபன்கள் அராஜகம்?

அடுத்த கொடுமை.. மைதானத்தில் பொதுவெளியில் அரங்கேறிய பயங்கரம்! தாலிபன்கள் அராஜகம்?

ஆப்கன்:

தாலிபன்களின் நாளுக்கு நாள் பெருகிவரும் அராஜகங்களை கண்டு, உலக மக்கள் அதிர்ந்து உள்ளனர். இன்றும்கூட ஒரு கொடூரத்தை தாலிபன்கள் நடத்தி உள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்துக்கு மேலாகிவிட்டது. ஆனால், அங்குள்ள பெண்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது.

பள்ளிக்கூடங்களே திறக்காமல் உள்ளன. பல்கலை கல்வி நிலையங்களில், ஆண்களுடன் ஒன்றாக உட்கார்ந்து கல்வி கற்க அனுமதி கிடையாது. பெண்களுக்கு ஆடைக்கட்டுப்பாடுகளும் அமலில் உள்ளன.

பெண் பிள்ளைகளுக்கு ஆசிரியைகள் தான் பாடம் நடத்தப்பட வேண்டும். பல்கலைக் கழகங்களில் பெண்கள் பணியாற்ற கட்டுப்பாடுகளை விதித்துவிட்டனர். மகளிர் மேம்பாட்டுத்துறையில் பெண்கள் வேலைபார்க்க தடை போட்டாகிவிட்டது.

மற்றொருபுறம் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. ஆப்கன் மக்கள் வறுமையின் பிடியில் சிக்கி உள்ளனர். இந்த கொடுமைகளுக்கு நடுவில், இஸ்லாமிய சட்டமான ஷரியா சட்டத்தை அமுல்படுத்தி கடுமையான கட்டுப்பாடுகளையும், தண்டனைகளையும் தாலிபான்கள் மெல்ல மெல்ல நிறைவேற்றி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்புகூட, லோகர் மாகாணத்தில் ஒரு கொடூரம் நடந்தது. ஒரு பெரிய மைதானத்தில் ஏராளமான ஆண்கள் கூடிநிற்க, அவர்கள் முன்னிலையில் 3 பெண்கள் உள்பட 12 பேருக்கு தாலிபான்கள் கசையடி தண்டனை தந்துள்ளனர். தண்டனை பெற்ற 12 பேருமே திருட்டு மற்றும் பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர்கள். அந்த குற்றங்களில் நிரூபணமானவர்கள். அதனால், தண்டனையை தாலிபன்களே நிறைவேற்றினர்.

தண்டனையை நிறைவேற்றுவதற்காகவே, பெரிய மைதானத்தை தயார் செய்தனர். அந்த மைதானத்திற்கு, 12 குற்றவாளிகளும் அழைத்து வரப்பட்டு, மைதானத்தின் நடுவே நிற்கவைக்கப்பட்டனர். மைதானத்தை சுற்றிலும் ஏராளமான ஆண்கள் நின்றிருந்தனர். அவர்கள் முன்னிலையில், 3 பெண்கள் உள்பட 12 பேரையும் 21 முதல் 39 கசையடிகள் தண்டனையாக வழங்கினர்.

இந்த தண்டனையை நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காகவே, சோஷியல் மீடியாவில், அனைவரும் திரண்டு மைதானத்துக்கு வந்து தண்டனையை நேரில் பார்க்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படியே ஏராளமான ஆண்கள் கிளம்பி மைதானத்துக்கு வந்திருந்தனர். அவர்கள் முன்னிலையில், தண்டனை அரங்கேறியது.

இன்றும் ஒரு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரு கொலைக்குற்றவாளியை, பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டு மரண தண்டனையை தந்துள்ளனர். கடந்த 2017-ல், அந்த நபர் ஒருவரை கத்தியால் குத்திவிட்டு, அவரது பைக் மற்றும் செல்போனை திருடி சென்றவராம். அதனால் இந்த மரண தண்டனை மேற்கு மாகாணத்தின் தலைநகரான பாராவில், நிறைவேற்றப்பட்டது. இந்த தண்டனையை நிறைவேற்றும்போது, தலிபானின் முக்கிய தலைவர்களும் அந்த மைதானத்தில் இருந்தனர்.

இந்த தகவலை தலிபான்களின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹில்லா முஜாகித் உறுதி செய்துள்ளார். நாளுக்கு நாள் கொடூரங்கள் அரங்கேறிவரும் நிலையில், மறுபடியும் 90 களின் தாலிபான்களின் காலகட்டம் வந்துவிட்டதோ என்ற அச்சம் கிளம்பி உள்ளது. ஒருபக்கம் வறுமை, மறுபக்கம் கட்டுப்பாடுகள், இதற்கு நடுவில் கொடிய தண்டனைகள் என தாலிபன்களிடம் சிக்கி கொண்டு தவித்து வருகிறார்கள் ஆப்கன் மக்கள்.

Exit mobile version