புதிய முயற்சியில் களமிறங்கும் போக்குவரத்து கழகம்! இனி பொதுமக்களுக்கு இதெல்லாம் ஈஸி தான்!

0
269
The transport corporation is embarking on a new initiative! All this is easy for the public! The transport corporation is embarking on a new initiative! All this is easy for the public!

 

நஷ்டத்தில் இயங்கி வருவதாக கூறப்படும் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் நிதி நெருக்கடியை சமாளிக்கும் வகையில் புதிய முயற்சியில் அதாவது சரக்கு போக்குவரத்து தொடங்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

தமிழக அரசின் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தற்பொழுது கடும் நிதி நெருக்கடியில் செயல்பட்டு வருகின்றது. இருப்பினும் பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம், முதியவர்களுக்கு இலவச பாஸ், மாணவர்களுக்கு இலவச பயணம் போன்ற பல திட்டங்களையும் நஷ்டத்திலும் தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றது. டீசல் விலையும் அதிகரித்துள்ளது. பேருந்துகளின் உதிபாகங்களின் விலை, ஊழியர்களின் சம்பளம் ஆகியவையும் அதிகரித்துள்ள நிலையில் தமிழக அரசு மக்களின் நலனுக்காக தொடர்ந்து நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

இருப்பினும் இந்த கஷ்டங்களையும் நஷ்டங்களையும் சமாளிக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. அந்த வகையில் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும், அறுபடை வீடு போன்ற பிரபலமான பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று வருவதற்கும் ஒப்பந்தம் அடிப்படையில் தமிழக அரசு பேருந்துகளை இயக்கி வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது நஷ்டங்களை ஈடுகட்டும் விதமாக தனியார் துறையுடன் இணைந்து அரசு சரக்கு போக்குவரத்து சேவையை தொடங்கவுள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் 317 பணிமனைகளில் இருந்து 20232 பேருந்துகளை 10000க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கி மக்களுக்கு சேவை செய்து வருகின்றது. இந்த பேருந்துகள் அனைத்தும் ஒரு நாளுக்கு குறைந்தபட்சமாக 82 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்கின்றது. அவ்வாறு இயங்கும் பேருந்துகளில் சுமார் 1.75 கோடி மக்கள் பயணம் செய்கின்றனர்.

எரிபொருள்கள் விலை அதிகரிப்பு, ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு, உதிரிபாகங்கள் விலை அதிகரிப்பு, 6600 கோடி வருவாய் குறைவு என்று பல காரணங்கள் தடையாக இருந்தாலும் அரசின் உதவியால் இன்றளவும் மக்களுக்கு பேருந்து சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

நிதி வருவாயை அதிகரிக்க வேண்டி அரசுப் போக்குவரத்து கழகங்கள் தற்பொழுது இதர வருவாய் திட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றது. அவ்வாறு அதிகமாக வருவாய் ஈட்ட பேருந்துகளில் விளம்பரம் மேற்கொள்ளல், கட்டிடங்களை வாடகைக்கு விடுதல், டீசல் மற்றும் பெட்ரோல் மையங்களை ஏற்படுத்துதல், வெளியாட்களிடம் வேலையை கொடுத்தல் போன்ற பல முயற்சிகளை அரசு ஏற்படுத்தி வருகின்றது.

இந்த முயற்சிகளைத் தவிர தற்பொழுது சரக்கு போக்குவரத்து சேவையை செய்யவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. அதன்படி அரசு போக்குவரத்து பணிமனைகளில் பொருட்களை சேமித்து வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முயற்சி பொது-தனியார் கூட்டுத் திட்டம் அடிப்படையில் அமல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டம் வருமானப் பகிர்வு அல்லது பிற வணிக ஒப்பந்தங்களின் அடிப்படையில் செயல்படவுள்ளது.

இந்த முயற்சி எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை ஆய்வு செய்ய முதலில் ஆலோசகர் ஒருவர் நியமிக்கப்படுவார். பின்னர் இந்த திட்டத்தில் இணைய ஆர்வமுள்ள நிறுவனங்களிடம் இருந்து கோரிக்கை தயார் செய்யப்படும். அதன் பின்னர் உரிய பொருள் கூட்டாளரை தேர்வு செய்வதற்கான வரைவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அவ்வாறு தேர்வு செய்யப்படும் நிறுவனம் பொருள் போக்குவரத்து தொழிலை செய்வதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ளும்.

இந்த பொருள் போக்குவரத்து தொழில் திட்டத்தை மேற்கொள்ள தமிழக அரசு பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக்குழு நிறுவனத்தை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்துள்ளது. இவ்வாறு இந்த சேவையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இறங்குவதால் அதிக வருவாய் கிடைக்கும். மேலும் இந்த வருவாயை பயன்படுத்தி தற்பொழுது போலவே போக்குவரத்து சேவையை நீட்டிக்க முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.