மாஸ்டர் படக்காட்சிகளை மிஞ்சும் வேலூர் விவகாரம்!

0
190
#image_title

மாஸ்டர் படக்காட்சிகளை மிஞ்சும் வேலூர் விவகாரம்!

வேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்தில் இருந்து 7 இளம்சிறார் கைதிகள் தப்பி ஓட்டம்! கடந்த இரண்டு மாதத்தில் 3வது முறையாக தப்பித்த சிறார்கள்! இருவர் பிடிபட்ட நிலையில் 5 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!

வேலூர் காகிதப்பட்டறையில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் அரசினர் பாதுகாப்பு இடத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட இளம் சிறார்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இங்கிருந்து, கடந்த மார்ச் 27ஆம் தேதி 6 இளம் சிறார் கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அவர்களைப் பிடிக்க எஸ்பி ராஜேஷ் கண்ணன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டிருந்த நிலையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 13ஆம் தேதி 5 இளம் சிறார் கைதிகள் சுவர் ஏறி குதித்து தப்பியோடினர். அவர்களை ஆட்சியர் அலுவலகம் அருகே மடக்கி பிடித்த போலீசார் மீண்டும் பாதுகாப்பு இடத்தில் அடைத்தனர். ஏற்கனவே இரண்டு முறை இளம் சிறார்கள் தப்பி ஓடிய சம்பவம் அரங்கேறிய நிலையில் மூன்றாவது முறையாக நேற்று இரவு 7 இளம் சிறார்கள் தப்பி ஓடியுள்ளனர்.

அவர்களில் இருவரை வேலூர் அடுத்த பெருமுகைப் பகுதியில் மடக்கி பிடித்ததாகவும், மீதமுள்ள 5 பேரையும் தீவிரமாக தேடி வருவதாகவும் காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மாஸ்டர் பட காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு வேலூர் அரசினர் பாதுகாப்பு இடத்தில் நடந்து வரும் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.