பொதுவாக நாம் எந்த கோவிலின் உள்ளேயும் நுழையும் பொழுது அந்த கோவிலில் உள்ள தெய்வத்தின் மூல மந்திரத்தை நம் மனதில் ஜெபித்துக் கொள்ள வேண்டும். சிவன் கோவிலுக்கு செல்லும் பொழுது சிவாய நமஹ, சிவாய நமஹ என்று கூறுவோம். அதேபோன்று பெருமாள் கோவிலுக்கு உள்ளே நுழையும் போது “ஓம் நமோ நாராயணாய நமஹ”என்ற மந்திரத்தை மனதிற்குள் ஜெபித்துக் கொண்டே செல்ல வேண்டும்.
சிவன் கோவிலில் நாம் எவ்வாறு வழிபாடு செய்வோமோ அதே போன்று தான் பெருமாள் கோவிலிலும் வழிபாடு செய்ய வேண்டும். முதலில் தாயாரை வழிபாடு செய்து விட்டு, அதன் பிறகு பெருமாளின் வாகனம் மற்றும் பாதுகாவலரான கருடன் மற்றும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்ய வேண்டும். இவர்களிடம் அனுமதி வாங்கிய பிறகு தான், பெருமாளை நம் மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
பெருமாள் என்பவர் அலங்கார பிரியர் ஆவார். இதனால் இவரை அனைத்து கோவில்களிலும் சிறப்பாக அலங்காரம் செய்து வைத்திருப்பர். எப்பொழுதும் நம் கண்களை மூடிக்கொண்டு கடவுளிடம் நமது வேண்டுதல்களை கூறக்கூடாது. எனவே நமது கண்களை திறந்து பெருமாளை பார்த்து ரசித்த வண்ணம் நமது வேண்டுதல்களை கூறி வணங்க வேண்டும். பெருமாள் கோவிலில் நமக்கு கிடைக்கக்கூடிய பிரசாதம் என்றால் துளசி, தீர்த்தம், சடாரி ஆகியவையாகும்.
பெருமாள் கோவிலில் தீர்த்தம் வாங்கும்பொழுது பெண்கள் தனது புடவை முந்தானையை இடது கையில் பிடித்துக் கொண்டு, அதன் மேல் வலது கையை வைத்து தீர்த்தத்தை வாங்க வேண்டும். ஆண்கள் தனது இரு கைகளாலும் தீர்த்தத்தை வாங்க வேண்டும். இவ்வாறு தீர்த்தம் வாங்கி பருகிய பின்னர் மீதமுள்ள தீர்த்தத்தை நிறைய பேர் தலையில் தடவுவார்கள். அவ்வாறு தலையில் தடவுவது மிகவும் தவறான ஒன்று.
ஏனென்றால் நாம் தீர்த்தம் பருகிய பின்னர் பெருமாளின் திருவடிகளாக கருதக்கூடிய சடாரியை நமது தலையில் வைப்பார்கள். அதனை வைக்கும் பொழுது நாம் நமது தலையில் தடவிய எச்சில் தண்ணீர் இருக்கும். பெருமாளின் திருவடிகளாகிய சடாரியை வைக்கும் பொழுது, நமது எச்சில் தண்ணீர் தலையில் இருந்தால் அது பாவச் செயலாக மாறிவிடும்.
எனவே நமது கையில் உள்ள மீத தீர்த்தத்தினை நமது துணிகளில் துடைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு சடாரியை வாங்கும் பொழுது நாம் நிமிர்ந்து இருக்கக் கூடாது. குனிந்து பணிவாக வணங்கியவாறு அந்த சடாரியை நமது தலையில் வாங்கிக் கொள்ள வேண்டும். இறுதியாக பெருமாள் கோவிலை வலம் வந்து வணங்கிய பிறகு, கொடி மரத்தின் அடியில் விழுந்து கும்பிட்டு வரவேண்டும்.