தாயின் மரணத்தில் சந்தேகம் புகார் வழங்கிய மகன்! புதைத்த உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை குன்னம் அருகே பரபரப்பு!

0
130

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா வேப்பூர் அருகே இருக்கின்ற பள்ளகாளிங்கராய நல்லூர் கிராமத்தை சேர்ந்த தர்மலிங்கத்தின் மனைவி லட்சுமி இவர்களுடைய மகன் கலைவாணன். அதே ஊரிலி ருக்கின்ற மற்றொரு வீட்டில் லட்சுமி மாடியில் குடியிருந்து வந்த சூழ்நிலையில், அவருக்கு ஏற்கனவே உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது அதோடு உடலில் பல பிரச்சனைகளும் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

சென்ற மாதம் 18ஆம் தேதி அவர் இறந்து கிடந்ததாக சொல்லப்படுகிறது. இவ்வாறு இயற்கையாக மரணமடைந்து விட்டதாக நினைத்து அவருடைய உடலை அவருடைய மகன் கலைவாணன் உள்ளிட்ட உறவினர்கள் பள்ளகாளிங்கராய நல்லூர் மயானத்தில் அடக்கம் செய்தார்கள்..

இந்த சூழ்நிலையில், இந்த சம்பவம் நடைபெற்று சுமார் ஒரு வாரம் சென்ற பின்பு கலைவாணன் தன்னுடைய வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்த்தபோது அதிர்ச்சிக்குள்ளானார்.

அதாவது அவருடைய தாய் லட்சுமி இறந்ததாக தெரியவந்த நாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணியளவில் அவர் வசித்து வந்த வீட்டின் மேல்மாடி பகுதிக்கு சந்தேகத்துக்குள்ளான விதத்தில் அவருடைய நெருங்கிய உறவினர் ஒரு சிலர் வந்து சென்றது பதிவாகி இருந்ததாக சொல்லப்படுகிறது.

இதனை அடிப்படையாக கொண்டு தன்னுடைய தாயின் இறப்பில் சந்தேகம் உண்டாகியிருக்கிறது என்று தெரிவித்து அடக்கம் செய்யப்பட்டுள்ள அவருடைய உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கடந்த மாதம் 28ம் தேதி கலைவாணன் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுவை வழங்கியிருந்தார்.

அத்துடன் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆதாரமாக வழங்கி இந்த மனு மீதான விசாரணையை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணி உத்தரவின்பேரில் குன்னம் காவல்துறையை சேர்ந்தவர்கள் முதல் கட்ட விசாரணையாக லட்சுமியின் சாவு தொடர்பாக சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தார்கள்.

அதோடு குன்னம் தாசில்தார் அனிதா முன்னிலையில் அரசு மருத்துவர் சரண்யா தலைமையிலான மருத்துவ குழுவை சேர்ந்தவர்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்த இலட்சுமியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்து மறுபடியும் அடக்கம் செய்தார்கள். அதோடு லட்சுமியின் உடலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த பரிசோதனையின் முடிவுகள் கிடைத்தவுடன் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருப்பவர்களை சந்தேகத்தினடிப்படையில் கைது செய்து விசாரணை செய்யப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள் இந்த சம்பவம் பள்ளக்காளிங்கராயநல்லூர் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது