Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரசவத்திற்காக அனுமதிக்க பட்ட பெண் உயிரிழப்பு – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் வாக்குவாதம்!

#image_title

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்க பட்ட பெண் உயிரிழப்பு – உடலை வாங்க மறுத்து உறவினர்கள் வாக்குவாதம்.

செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அடுத்த நெடுமரம் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (32). இவருக்கு திருமணமாகி பிரமிளா (29) என்கிற மனைவி உள்ளார். கடந்த 3-ந்தேதி பிரமிளாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் கூவத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 4-ந்தேதி பிரமிளாவிற்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தொடர்ந்து தாய் சேய் இருவரையும் வார்டுக்கு அனுப்பி உள்ளனர்.

அடுத்த நாள் மாலை 4-மணியளவில் பிரமிளாவிற்கு திடீரென வயிறு வீங்கி உள்ளது. அதனால் அவருக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி மீண்டும் அறுவை அரங்கத்திற்கு அழைத்துச் சென்று ஆபரேஷன் செய்துள்ளனர்.

இதனையடுத்து 6-ம் தேதி பிரமிளாவை அவரது உறவினர்கள் பார்க்க சென்ற போது சுயநினைவு இன்றி இருந்துள்ளார். இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை என உறவினர்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.

தொடர்ந்து 5-நாட்களுக்கும் மேல் பிரமிளா கண் விழிக்கவில்லை. இதனிடையே நேற்றிரவு டயாலிசிஸ் செய்த நிலையில் இன்று காலை பிரமிளா உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரமிளாவின் உறவினர்கள் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பயிற்சி மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தான் பிரமிளா உயிரிழந்து விட்டதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Exit mobile version